குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
சென்னை: உடனடியாக, சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என திமுக அரசை கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக பல்லடம் அருகே உள்ள சின்னக்காளி பாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றி சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருவதால் அவ்விடத்தை குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், இடுவாய் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் இதற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சின்னக்காளி பாளையத்தை ஒட்டிய பகுதிகள், விவசாயம் செழித்து வளர்ந்துள்ள பகுதியாக இருக்கும் போது, குப்பை கொட்டப்பட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள நான்கு ஊராட்சிகளிலும் நிலத்தடி நீர் மாசுபடும். இதுமட்டுமின்றி, இப்பகுதிக்கு மிக அருகிலேயே இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சுமார் 5.4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், கிளை வாய்க்காலும் அமைந்துள்ளது. மேலும், குப்பை கொட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு எதிரிலேயே மத்திய அரசின் வன மரபியல் மற்றும் வன பெருக்கு நிறுவனத்தின் மூங்கில் பூங்கா அமைந்துள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மையமாகவும் இப்பகுதி விளங்குகிறது.
இயற்கைக்கும், விவசாயத்திற்கும் இத்தனை முக்கியத்துவம் பெற்றுள்ள இப்பகுதியை நாசமாக்கி குப்பை மேடாக மாற்ற திமுக அரசு நினைப்பது என்ன மாதிரியான மனநிலை? உடனடியாக, சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என திமுக அரசை கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.