மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!
சென்னை: அமெரிக்காவின் வரிவிதிப்பை சமாளிக்க சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, பாமக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியான செயல்களை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியுடன், தற்போது மேலும் 25 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த அதிகப்படியான வரி விதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 70 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில்,
இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ரூ.3000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது.
இந்தச் சூழலில் தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனை, மேற்கோள் காட்டி முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, திமுக அரசை விட முன்னோடியான செயல்களை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பை சமாளிக்க, மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இதற்காக நீங்கள் வலியுறுத்தாமல், தமிழகத்தில் நியாயமற்ற வகையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முதல்வர் ஸ்டாலின் முதலில் திரும்பப் பெற வேண்டும் என்று பதில் தெரிவித்துள்ளார்.