பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

Meenakshi
Jul 31, 2025,06:56 PM IST

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.


சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கூட்டத்தில், பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்த, அதற்கு எதிராக மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.




இந்நிலையில், பா.ஜ.க கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்துள்ளார். ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.மேலும், இனி  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம் பெறாது.


யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல,  யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணி இல்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். கூட்டணியில் இருந்து விலகிய காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடறியும் என்று ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில்  பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.