மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

Su.tha Arivalagan
Jul 31, 2025,06:56 PM IST

சென்னை: மத்திய பாஜக அரசை நேற்று கண்டித்திருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மாநில திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வருபவர் ஓ.பன்னீர் செல்வம். அண்ணாமலையின் முழு ஆதரவும் இவருக்குத்தான் இருந்து வந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடனான மோதலில் கடைசி வரை வெல்ல முடியாமல் போய் விட்டது ஓபிஎஸ்ஸால். காரணம், மத்திய பாஜக தலைமை கடைசியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால், ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு விட்டார்.


இந்த நிலையில்தான் நேற்று பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஓ.பி.எஸ். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இன்று திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓ.பி.எஸ்.


அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ் கூறியிருப்பதாவது:




தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழையெளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமென்றால் அனைத்து மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், மருந்தாளர், தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும்; மருத்துவ உபகரணங்கள், குளிர்பதன வசதி, மாத்திரைகள் போன்றவை இருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் மருந்தாளர் காலிப் பணியிடங்களே நிரப்பப்படாத அவல நிலை நிலவுகிறது.


தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், பிற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் 4,500 மருந்தாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 700 மருந்தாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், ஓய்வு பெறும் மருந்தாளர் பணியிடங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் மருந்துகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.


மருந்து விநியோகத்தில் மிகுந்த சிரமம் உள்ளதாகவும், 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் தகரத்தால் அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் இருக்கின்றன என்றும், அரசு மருத்துவமனைகளில் குளிர்பதன வசதி இல்லை என்றும் அனைத்து மருந்தாளர் சங்கம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்கும் ஏழையெளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


மருத்துவமனையைத் தேடிச் சென்றாலே மருந்து இல்லை என்கின்ற நிலையில், “இல்லம் தேடி மருத்துவம்" என்று தி.மு.க. அரசு விளம்பரப்படுத்திக் கொண்டு வருவது நகைப்புக்குரியதாக உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க. அரசுக்கு மக்கள்மீது அக்கறை இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்பவும், மருந்துகளை அதற்கேற்ற வெப்ப நிலையில் இருப்பில் வைத்துக் கொள்ளவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


பரவாயில்லை.. அடுத்தடுத்து மாறி மாறி கண்டனம் தெரிவித்து பேலன்ஸ் செய்துள்ளார் ஓ.பி.எஸ்!