GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
டெல்லி: ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். ஆனால் 8 வருடமாக இதைச் செய்யாமல் இப்போது திடீரென செய்ததற்கு என்ன காரணம் என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. சாமானிய மக்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைப் பலரும் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:
ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பொருட்கள், சேவைகளுக்கான வரிக் குறைப்பு ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கைதான், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது.
தற்போதுள்ள ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்றைய தேதி வரை நடைமுறையில் இருந்த வரிகள், ஆரம்பத்திலிருந்தே அமல்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாகவே, ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் வரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்த சங்காகவே ஆகிவிட்டது.
இந்த மாற்றங்களைச் செய்ய அரசைத் தூண்டியது எது என்பதை ஊகிப்பது சுவாரசியமாக இருக்கும்:
பொருளாதார மந்தநிலை?
குடும்பக் கடன் அதிகரிப்பு?
குடும்பச் சேமிப்பு குறைந்தது?
பீகார் தேர்தல்?
ட்ரம்ப் மற்றும் அவரது வரிகள்?
அல்லது மேற்சொன்ன அனைத்துமே?