வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

Meenakshi
Jul 30, 2025,06:06 PM IST

கோவில்பட்டி: பாஜக ஆட்சியை கவிழ்த்து ஜெயலலிதா வரலாற்றுப்பிழை செய்தார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சால் தற்போது சலசலப்பு எற்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், 1998ல் பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில பாஜகவை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்.


பாஜக ஆட்சியை அதிமுக கவிழ்த்ததால் திமுக 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது. திமுக தமிழகத்தில் வளர பாஜக தான் காரணம். திமுகவிற்கு அதிகாரம் கொடுத்ததே பாஜக தான் . அந்த பாஜகவை இன்றைக்கு திமுக தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது. அன்றைக்கு பாஜக திமுக கூட்டணி அமைத்ததன் காரணமாக தான் திமுக இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது என்று பேசியுள்ளார்.




இவரின் இந்த பேச்சு அதிமக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடம்பூர் ராஜூவை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி தொண்டர் கூறி வருகின்றனர்.


1998ல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து வரலாற்றுப்பிழை செய்துவிட்டது என நான் பேசியது திரித்து கூறப்பட்டு வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இப்படி செய்கின்றனர். 1999ல் தமிழக நலன் கருதி கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியது என கடம்பூர் ராஜூ தெரிவித்து வருகிறார்.