முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய் கருத்தை வரவேற்கிறேன்: அண்ணாமலை
சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் பேசிய கருத்துக்களை வரவேற்கிறேன். விஜய் பேசியதை மறுத்தால், ஆளும் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் 2024 முதல் எங்கள் கூட்டணியில் இருந்தார். அவர் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த போது நான் சென்னைக்கு வெளியே இருந்தேன். இப்போது சென்னை வந்ததும் அவரை நேரில் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது, திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவேண்டும் என அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். எனவே அவர் நவம்பரில் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் பேசிய கருத்தை வரவேற்கிறேன். ஏற்கெனவே, திமுக குடும்பத்தின் ஆடிட்டரை துபாய்க்கு செல்லும்போது முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் சென்றார். அதன் அடிப்படையில்தான் இப்போது விஜய் குற்றம்சாட்டுகிறார். தங்கள் மேல் குற்றம் இல்லையென்றால் முதல்வர் தரப்பு வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.
முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வரிகள் இருந்தன. இதனால் முதன் முறையாக ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது 4 அடுக்கு தேவைப்பட்டது. இப்போது அதனை இரு அடுக்குகளாக குறைத்துள்ளோம். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக யாரும் பேசினால் அவரை பாஜகவின் பி டீம் என்று திமுக சொல்கிறது. ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். எனவே அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.