முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிராஸ்டேட் புற்றுநோய்.. தீவிரமடைந்திருப்பதாக தகவல்!
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தீவிர பிராஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 82 வயதாகும் ஜோ பைடன் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பின்னர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பைடனுக்கு சிறுநீர் தொடர்பான அறிகுறிகள் அதிகரித்ததை அடுத்து கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில்தான் அவருக்கு பிராஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஜோ பைடனின் புற்றுநோய் அவரது எலும்புகளுக்கு பரவியுள்ளது என்றும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆண்களை அதிகம் தாக்கக் கூடிய புற்றுநோய்களில் பிராஸ்டேட் புற்றுநோய் முக்கியமானதாக உள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் பொதுவாக ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் சரி செய்யக் கூடியது. இருப்பினும் இது முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் கடினமாகி விடும். அமெரிக்காவில் ஆண்களுக்கு புற்றுநோய் இறப்புக்கான இரண்டாவது முக்கிய நோயாக இந்த பிராஸ்டேட் புற்றுநோய் உள்ளது. அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் படி, அமெரிக்காவில் எட்டு ஆண்களில் ஒருவருக்கு இது கண்டறியப்படுகிறது.
புரோஸ்டேட் என்பது ஒரு சுரப்பியாகும். ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் உடலுக்குள் அமைந்துள்ளது. இதன் மிக முக்கியமான செயல்பாடு, விந்தணுக்கள் மற்றும் பிற சுரப்பிகளிலிருந்து திரவங்களுடன் சேர்ந்து விந்தணுவை உருவாக்கும் திரவத்தை உற்பத்தி செய்வதாகும். புரோஸ்டேட் சுரப்பியானது, சிறுநீர்ப்பைக்கு கீழே மற்றும் இடுப்புத் தளத்தின் தசைகளுக்கு மேலே அமைந்துள்ளது.
புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளரும்போது அது புற்றுநோயாக மாறுகிறது. தற்போது பைடனுக்கு கண்டறியப்பட்டுள்ளது முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய் என்பதால் அவரது நலம் விரும்பிகள் கவலை அடைந்துள்ளனர்.