குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!

Meenakshi
Sep 24, 2025,06:05 PM IST

வேலூர்: வேலூர் குடியாத்தம் அருகே தந்தை மீது மிளகாய் பொடி தூவி, காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் காவல்துறையால் மீட்கப்பட்டார்.


வேலூர் குடியாத்தம் பகுதியில், பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய 4 வயது சிறுவன் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


சாலையில் ஓரமாக காரை நிறுத்தி விட்டு காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று, பள்ளி சென்று திரும்பிய குழந்தையை வீடு புகுத்து தூக்கி சென்றுள்ளனர். இதனை அறிந்த சிறுவனின் தந்தை குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். காரில் இருந்த மர்ம நபர்கள் குழந்தையின் தந்தை மீது மிளகாய் பொடி தூவியதுடன், சிறுது தூரம் காரில் சிறுவனின் தந்தை வேணுவை இழுத்துச் சென்ற நிலையில், மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து சென்றுள்ளது.




கர்நாடக பதிவு எண் கொண்ட அந்த வெள்ளை நிற சொகுசு காரில் குழந்தை கடத்தப்படுவதைக் கண்டு தந்தை வேணு பதறிபோய் கூச்சலிட்ட நிலையில், போலீசாரிம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார்  6 தனிப்படைகள்  அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மஞ்சக்கொல்லை என்ற இடத்தில், குழந்தையை கடத்தல் கும்பல் விட்டுசென்றுள்ளனர். தனிப்படை போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கடத்தல்காரர்கள் வந்த காரின் பதிவு எண் போலியானது என்று தெரியவந்துள்ளது.