மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

Su.tha Arivalagan
Oct 21, 2025,04:57 PM IST

- ஷீலா ராஜன்


அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப் பெரிய வெற்றிகரமான திட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அதை மேம்போக்காக பலர் ( குறிப்பாக ஆண்கள்) விமர்சித்தாலும் கிண்டல் செய்தாலும் கூட அந்தத் திட்டத்தை நுனுக்கமாக உற்று நோக்கினால் பெண்களுக்கு அது மிகப் பெரிய நன்மையை விளைவித்துக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.


பேருந்துகளில் இலவச டிக்கெட் எதுக்கு இவர்களுக்கு.. ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய சரிவினை இந்த இலவச டிக்கெட் திட்டம் தருகிறது என்பது பொதுமக்களிலில் பலரின் கருத்து. ஏன் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது பெரும்பாலான ஆண்களின் கூக்குரலும் இதுதான்.




இலவச டிக்கெட்டுகளால்தான் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆண்களுக்கு என்று இருக்கைகளே கிடைப்பதில்லை என்று ஒவ்வொரு நாளும் பேசும் பேச்சுக்கள் காதில் கடப்பாறையால் குத்துவது போல் உள்ளது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் பெண்கள் தினசரி பஸ்களில் பயணம் செய்து கொண்டுள்ளனர்.


சரி அரசு ஏன் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது என்று ஆராய்ந்து பார்க்கலாமா.. அப்படிப் பார்த்தால் 

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இலவச டிக்கெட் திட்டம் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பது புரியும்.


சமுதாயத்தில் பெண்களின் கைகளில் வருமானம் வரும் பொழுது அவை எங்கனம் செலவிடப்படும் என்பது எல்லோரும் அறிந்தது தான். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடிப்பழக்கத்திற்கு ஆளான தந்தையால் உணவுக்கே கஷ்டப்படும் பெண் குழந்தைகள், வருமான குறைவினால் உயர்கல்வி கல்வி கற்க இயலா பெண் குழந்தைகள் தமிழகத்தில் ஏராளம் ஏராளம். இவர்களின் வாழ்வு மேன்மடையவே இந்த திட்டம் வந்திருக்குமோ என்று எனக்குள் ஒரு எண்ணம் உண்டு.


இலவசப் பேருந்துத் திட்டம் மட்டுமல்லாமல், மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகையும் கூட பெண்களுக்காக அரசு கொண்டு வந்தத் திட்டம்தான். அதுவும்  கூட பெண்களுக்கு மிகப் பெரிய அளவில் பயன் தருகிறது. போதுமான கல்வி இல்லை என்றாலும் தன்னால் இயன்ற வேலைகளை, ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பணிகளிலும், சிறு வியாபாரம் செய்வதிலும் ஏராளமான பெண்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். சரி இந்த ஊதியத்தினை கொண்டு என்னதான் செய்கின்றனர் இவர்கள். ஒவ்வொன்றாய் பார்ப்போமா.


நகை சீட்டு -  திருமணம் என்று வரும்போது அங்கே முக்கியத்துவம் பெறுவது தங்க நகைகள். அதற்காகவே தங்களின் பெண் குழந்தைகளின் பெயரில் இவர்கள் பெரும் ஊதியம் நகைச் சீட்டுகளாக மாறுகிறது. எதிர்கால பெண் குழந்தைகளின் கனவை நினைவாக்குகிறது. தமிழக முழுவதிலும் உள்ள நகை கடைகளில் இவர்களின் பணம் முதலீடுகளாக மாறுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும்பாலும் பெண்கள் சுயமாய் வாழ வழி செய்யும் நோக்கில்தான் கொண்டு வரப்பட்டது. ஆண்களின் கையை எதிர்பார்த்து நிற்கக் கூடாது, அடிமையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் இது கொண்டு வரப்பட்டது.


பெண்களும் கூட சுயமாக உழைத்து குடும்பத்தை உயர்த்தவே ஆசைப்படுகின்றனர். தங்களால் முடிந்த சிறு முதலீட்டினை கொண்டு இட்லி கடை போடுவது, ஆன்லைன் துணி வியாபாரம், பூக்கடை என சிறு சிறு வியாபாரங்களை செய்ய இந்த சுய உதவி குழுக்களில் இவர்கள் தங்கள் ஊதியத்தின் ஒரு பங்கினை மாத கடனாக பெற்ற தொகையை திருப்பி செலுத்த பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் மூலம் சிறு தொழிலும் ஊக்குவிக்கப்படுகிறது.




இலவச பேருந்துத் திட்டத்தால் பெண்கள் அதிக அளவில் வெளியில் வர முடிகிறது. குடும்பத்துக்காகவும், தங்களுக்குத் தேவையானதற்காகவும் எளிதாக அவர்களால் வெளியே வர முடிகிறது. பயணம் செய்து போக வேண்டிய இடத்தை இப்போது எளிதாக மேற்கொள்ள முடிகிறது. நிம்மதியாகவும், ஒரு விதமான தைரியமாகவும் அவர்கள் இதைச் செய்ய முடிவது இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய அம்சமாகும்.


குடும்பத்திற்குத் தேவையானது, பிள்ளைகளுக்குத் தேவையானது உள்ளிட்டவற்றை வாங்கி வருவதற்கு முன்பெல்லாம் ஆட்டோக்களை நம்பித்தான் பெண்கள் இருந்தனர். இப்போது பஸ்களில் கட்டணம் இல்லாததால் அந்த செலவு அவர்களுக்கு மிச்சமாகிறது. மிச்சமாகும் அந்தப் பணத்தையும் கூட அவர்கள் இப்போது அவர்களுக்காக இல்லாமல், குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காகத்தான் பயன்படுத்துகின்றனர். முன்பை விட கூடுதலாக குடும்பத்திற்காக அவர்கள் செலவிடுகிறார்கள், அவர்களின் சேமிப்பும் கூட அதிகரிக்கிறது.


சரியாக சம்பாதித்துக் கொடுக்காத குடும்பத் தலைவனை கண்டு கொள்ளாமல் இவர்கள் தேனீக்களாக பறந்து சென்று தங்களது குடும்பத் தேவைகளை நிறைவேற்ற முடிகிறது. இந்தத் திட்டத்தால் இன்னும் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளதாக சொல்கிறார்கள். அதாவது குடும்ப கவலைகளை எண்ணி எண்ணி புலம்பி கண்ணீரோடு வீட்டில் புலம்பிக் கொண்டிருப்பது, தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதாபாத்திரங்களோடு தம்மை இணைத்து பார்த்து மனநலம் குன்றி போவது.. இப்பொழுது எல்லாம் குறைந்து வருவதாக சொல்கிறார்கள். வெளியில் போகலாம், ஏதாவது வேலை செய்யலாம்.. அதுதான் இலசவ பஸ் இருக்கிறதே.. என்ற தன்னம்பிக்கை துளிர்த்து, தன்னாலும் முடியும் என்ற மன உறுதியும் அதிகரித்துள்ளது.


இப்படி எத்தனையோ நன்மைகளை இந்த இலவச பேருந்து திட்டம் பெண்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அரசு ஏன் இந்த திட்டத்தை பெண்களுக்கு மட்டுமே செய்கிறது என்ற கேள்வியை சிலர் கேட்கிறார்கள். தயவு செய்து அப்படிக் கேட்காதீர்கள். காரணம் அந்தக் கேள்வியே அபத்தமானது. வருமானம் குறைவா இருக்குற குடும்பங்கள்ல வயிறு நிறைய சாப்பிடுவது கூட இல்லை. இந்த இலவசத் திட்டங்கள் வந்த பிறகு மிச்சமாகும் அந்தக் காசு, அவர்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற கை கொடுக்குது. முன்னாடி பஸ்சில் போவதாக இருந்தால், குறைந்தது 20 ரூபாய் தேவைப்படும். இந்த இலவசப் பேருந்து வந்த பிறகு என்னுடைய சாப்பாட்டுக்கு அதை நான் பயன்படுத்துகிறேன் என்று தமிழா தமிழா டாக் ஷோவில் ஒரு பெண் கூறியதை இங்கே நினைவுபடுத்துகிறேன். அது ரொம்ப டச்சிங்கா இருந்தது.


வருமானம் குறைவா இருக்கிற பெண்களை பலரும் குறி வைக்கும் கொடுமையும் முன்பு அதிகமாக இருந்தது. செலவு செய்து பஸ்சில் பயணித்து வேலைக்குப் போய் சம்பாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் பல பெண்கள் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த இலவச பஸ் திட்டம் மிகப் பெரிய உதவியாக மாறியுள்ளது. இப்போது என்னால் வெளியில் எளிதாக செல்ல முடியும், என்னால நிம்மதியாக சம்பாதிக்க முடியும். சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக குடும்பத்துக்கே செலவழிக்க முடியும் என்ற நிலை பெண்களுக்கு வந்துள்ளது. இதனால் இதற்கு முன்பு ஆண்களிடம் அடி பணியும், அவர்களிடம் அடிமையாகப் போகும், அவர்களின் கீழ்த்தர வக்கிர புத்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ற அவல நிலையிலிருந்து பெண்கள் பலரும் தப்பியுள்ளனர்.




பொதுவாக சொல்வதானால், இலவச பேருந்துத் திட்டம் பெண்களுடைய, குறிப்பாக நடுத்தர வர்க்கப் பெண்களின் தரத்தை உயர்த்தியுள்ளது. அன்றாடம் பஸ்களில் பயணம் செய்து வேலை பார்க்கும் பெண்களுக்கு இது மிகப் பெரிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதிக அளவில் வெளியில் வந்து வேலை செய்யும் ஊக்கத்தையும் இது பெண்களுக்குக் கொடுத்துள்ளது. பெண்கள் அதிக அளவில் வேலை செய்வதன் மூலம் குடும்பங்களின் நிலையும் மாறியுள்ளது, அவர்களின் தடுமாற்றங்களும் குறைந்துள்ளது.


இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. அதாவது இலவசப் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தான் அதிகம் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் மிகவும் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களும், 3வது இடத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் உள்ளனர். மற்றவர்கள் அதற்கு அடுத்த நிலைகளில்தான் வருகின்றனர். ஆக கிட்டத்தட்ட 70 சதவீத பெண்கள் சமூகத்தின் விளிம்பு நிலை மற்றும் நடுத்தர நிலையில் இருப்பவர்கள் என்று மாநில அரசின் திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று கூறுகிறது.


இந்தத் திட்டத்தால் பெண்களுக்கு வெளி உலக, Exposures அதிகமாகியிருக்கு.. வெளியுலக அறிவு கிடைக்குது. தனக்காக செலவு செய்து கொள்ள, தன்னோட வாழ்க்கைய வாழ அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. எனவே இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்கள், அந்தப் பெண்களின் உள் மனசு வலியை உணர்ந்தாலே போதும், நிச்சயம் இதைப் பாராட்டுவார்கள்.