சாலை விபத்தில் சிக்கினால்.. இனி இலவச மருத்துவம்.. மத்திய அரசே சிகிச்சைக்கு பணம் தரும்

Su.tha Arivalagan
May 08, 2025,12:33 PM IST

டெல்லி: சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் புதிய திட்டத்தை 2025 மே 5 முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 


இந்த திட்டத்தின் மூலம் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் ஏழு நாட்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும். குறிப்பாக, பணம் இல்லாத காரணத்தால் மருத்துவ உதவி கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மத்திய தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இந்த திட்டத்தை செயல்படுத்தும். தேசிய சுகாதார ஆணையம் மருத்துவமனைகளுக்கு பணம் செலுத்துவது போன்ற வேலைகளை கவனிக்கும். விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி கிடைக்க மத்திய அரசு முயற்சிப்பதா தெரிவிக்கப்பட்டுள்ளது. 




2024-ல் மட்டும் 1.8 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். அவர்களில் 30,000 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தனர். இந்த புதிய திட்டம் மூலம் நிறைய உயிர்களை காப்பாற்ற முடியும்.


இந்த திட்டம் எப்படி வேலை செய்யும், யாரெல்லாம் பயன்பெறலாம் போன்ற விவரங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது உண்மையில் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால், நிறைய பேர் பணம் இல்லாததால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இனிமேல் அந்த கவலை வேண்டாம். விபத்து நடந்த முதல் ஏழு நாட்களுக்கு மருத்துவ செலவை அரசாங்கமே ஏற்கும்.


அரசாங்கம் அங்கீகரித்த மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். ஆனால், அரசாங்கம் அங்கீகரிக்காத மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கான செலவை மட்டும் அரசாங்கம் ஏற்கும்.


மருத்துவமனைகளை பதிவு செய்வது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது, மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவது போன்ற வேலைகளை தேசிய சுகாதார ஆணையம் செய்யும். விபத்து நடந்தவுடன் போலீசுக்கு தகவல் தெரிவித்தால், 24 மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சை கிடைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் சிகிச்சை தாமதம் ஆவது தவிர்க்கப்படும்.