குழந்தைகளும் தீபாவளியும்!
- கவிஞர் க.யாஸ்மின் சிராஜுதீன்
ஒரு அழகான கடலோர கிராமம். எப்போதும் கடலலை ஓசையும் இளந்தென்றலும் வீசும். சிறுவர், சிறுமியர்கள் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள். "அலையே அலையே வா...வா.. என் கால்களை நனைக்க வா...வா.." என அலையோடு விளையாடுவார்கள். அப்போது, தீபாவளிப் பண்டிகை வர இன்னும் ஒருவாரம் இருந்தது. குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இதற்குமுன் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகையில் அவர்கள் செய்த சேட்டைகள் பற்றி நினைவு கூர்ந்தனர். முதலில் கவிதா சொன்னாள், "எனக்கு எங்க பாட்டி பட்டர்பிளை டிரஸ் வாங்கித் தந்தார், இந்த தீபாவளிக்கு ஏஞ்சல் டிரஸ் வாங்கித்தரேன்னு சொன்னாங்களே..." என ஆட்டம் போட்டாள். சின்னு சொன்னா... "நான் எங்க தாத்தாகிட்ட கேட்டா துப்பாக்கி, பட்டாசு எல்லாம் வாங்கித் தருவாங்களே... எப்பவும் தீபாவளின்னா ஜாலிதான்... நாம எல்லாரும் சேர்ந்து பட்டாசு வெடிக்கலாம். சந்தோஷமா இருக்கலாம்."
வேணி, இப்ப நான் சொல்லுறேன், "எங்க அம்மாவும், அத்தையும் நிறைய பலகாரம் சுடுவாங்க. நான் உங்களுக்கெல்லாம் தரேன்னு" சொன்னாள். அங்க அப்துலும் அவளது தங்கை கரீஷ்மாவும் இருந்தாங்க. அப்துல் சொன்னான். "எங்க பாட்டியும் பெட்டி நிறைய பட்டாசு வாங்கித் தருவாங்களே." அப்போ கரீஷ்மா, "என்னாது...? உனக்கு பட்டாசு வேணுமா, இந்த வருடம் வாங்கித்தர வேண்டாம் பாட்டினு, பாட்டி கிட்ட சொல்லப்போறேன்" என்றாள்.
நண்பர்கள் அனைவரும், "ஏன் அப்படி சொல்லுற கரீஷ்மா?" என்றனர். " ஏன்னா..." என கரீஷ்மா சொல்ல வரும்போது அப்துல், "வேணா சொல்லாதே!" எனத் துரத்த, இருவரும் ஓடுறாங்க. கரீஷ்மா, "நான் சொல்லுவேன்" என்று சொன்னாள். "எங்க அண்ணன் சுறுவத்திய கொளுத்தி தீபாவளி கொண்டாடும்போது பக்கத்துல நின்னுக்குனு இருந்த என்னுடைய கன்னத்துலயே தெரியாம சூடு வச்சிட்டான் பாருங்க. வடு அப்படியே இன்னு இருக்கு."
"ஆமா ...! இன்னும் இருக்கு . வடு தெரியுது" என நண்பர்கள் கோரஸாக சொன்னார்கள். "இது மட்டுமா இன்னும் இருக்கு. ராக்கெட் பட்டாசு விடலாம்னு மாடிக்குப் போய்.. எங்க அம்மா, நல்ல மண்ணை, செவசெவன்னு செடி நட கலந்து வச்சிருந்தாங்க. ஒரு மண் பூந்தொட்டியில அத எடுக்கும்போதே சொன்னேன், "வேணாண்ணா அம்மா திட்டுவாங்கன்னு," சொன்னா கேட்கல, வச்ச இராக்கெட்டு சர்ர்ர்ன்னு... மேலே போச்சி... ஆனா , 'டமால்'..ன்னு ஒரு சத்தம்.
பூந்தொட்டி உடைந்துவிட்டது. அம்மா, "என்னடா.. அங்க சத்தம்னு" சத்தம் போட்டாங்க. அன்னிக்கு அண்ணனுக்கு நல்ல திட்டு விழுந்தது." அனைவரும், "ஏன்டா... இப்படி பண்ண" என அறிவுரை கூறத் தொடங்கிவிட்டனர். அப்போ ராஜா சொன்னான், "டேய்.. இந்த முறை நாம விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடனும், அதுக்கு என்ன பண்ணலாம்?"
ராணி சொன்னாள், " வாங்க ..டா .. இப்ப புதுசா AI வந்திருக்கு அதுக்கு எல்லாம் தெரியுமாம், எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுமாம். வாங்க நாம எங்க அண்ணன்கிட்ட போய் போன் வாங்கி கேள்வி கேட்கலாம், சரி .. சரி ... வாங்க போகலாம் .." எல்லாரும் வீட்டை நோக்கி ஓடினார்கள்.
அண்ணன்கிட்ட கெஞ்சி, போன் வாங்கி AI இடம் கேள்வி கேட்கின்றனர்.
முதல் கேள்வி: ரகீம் கேட்கிறான், "சிறுவர்கள் என்ன பட்டாசு வெடிக்க வேண்டும்?"
AI பதில்: "சங்குசக்கரம், மத்தாப்பு..." என அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே சென்றது.
அடுத்து சஞ்சனா: "பெரியவர்கள் என்ன பட்டாசு வெடிக்க வேண்டும்?"
AI பதில்: "வாணவேடிக்கை, புஸ்வாணம், பூந்தொட்டி..." எனத் தொடர்ந்தது.
அடுத்த கேள்வி: சுஜாதா கேட்கிறாள், "பாதுகாப்பு முறைகளை சொல்லு?" என்றாள்.
AI பதில்: "பாதுகாப்பு முக்கியம்;
* திறந்த வெளியில் மட்டுமே பயன்படுத்தவும்.
* குழந்தைகளைப் பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து தள்ளி வைக்கவும்.
* பாதுகாப்புக் கண்ணாடி அணியவும்.
* தண்ணீர் மற்றும் முதலுதவிப் பெட்டி அருகில் வைத்திருக்கவும்.
* லேபிளில் உள்ள வயது மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும்." என பதில் கூறியது AI.
அப்புறம் அனைவரும் சேர்ந்து AI இடம் ஒரு கேள்வி கேட்டனர்.
"தீபாவளி உனக்கு மகிழ்ச்சி தருமா?"
AI பதில்:
"என்னுடைய பார்வையில் ஒரு சிறிய கருத்து. "தீபாவளி என்பது வீட்டில் ஏற்றப்படும் விளக்கு மட்டுமல்ல; மனித மனத்தில் ஏற்றப்படும் அன்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒளியாகும்."
AI அதைப் பற்றி அழகாக எழுத முடியும். ஆனால் அந்த மகிழ்ச்சியை மனிதர்களைப் போல வாழ்ந்து உணர முடியாது.
இதுதான் AI-க்கும் மனிதர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு!" என்றது. "நான் உங்களுக்கு உதவி செய்யும் தொழில்நுட்பம் மட்டுமே. என்னைப் பயன்படுத்துங்கள், அடிமையாக ஆகாதீர்கள்! உங்கள் சிந்தனை மிகவும் உயர்வானது, நான் சொல்வதைச் சுயமாக சிந்தித்து இறுதி முடிவு எடுங்கள்! வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, விபத்தில்லா மகிழ்வான தீபாவளியைக் கொண்டாடுங்கள்!"
AI யை நாம எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நன்மையும், தீமையும் இருக்கு. AIக்கு நாம அடிமை இல்லை; தேவைக்குப் பயன்படுத்தி, பயன்பெறனும். சரி, போன் அண்ணங்கிட்ட கொடுத்துவிடலாம். "Thank-you அண்ணா!" என கோரஸாகச் சொன்னார்கள்.
சரி...சரி ..அம்மா தேடுவாங்க நாம நாளைக்கு சந்திக்கலாம், இந்த வருடம் சிறப்பா தீபாவளி கொண்டாடலாம் என ஆட்டம் போட்டுக் கொண்டே அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். எல்லாரும் மனதில் தீபாவளியை நினைத்து மகிழ்ந்தனர்.. மனசு மத்தாப்பு போல ஜொலித்தது... தீபாவளியும் வந்தது. பட்டாசுகள் 'பட பட' என வெடித்தனர்.
நண்பர்கள் அனைவரும் பலகாரங்கள் மட்டுமல்ல மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். இனிமையான தீபாவளியைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாகக் கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)