Short Story: தொடநடுங்கி!
- கா.காயத்ரி தேவி
குப்புசாமி ஒரு விவசாயி. தன் ஊரிலேயே அதிகமான நிலத்தை வைத்திருக்கும் செல்வந்தர்களில் அவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் ஓரிரு ஏக்கர் இருந்த நிலத்தை இப்போ அபரிமிதமா பெருக்கியதற்கு காரணமே குப்புசாமியின் மனைவி வேலம்மாள்தான்.
இளகிய மனம் உள்ள குப்புவுக்கு நேர் எதிரானவள் வேலம்மா. மிரட்டும் தோரணையுடன் வலம்வரும் வேலம்மா, தன் திறமையால் குப்புசாமியை பெரிய செல்வந்தர் நிலைமைக்கு உயர்த்திய கடும் உழைப்பாளி மற்றும் புத்திக்கூர்மை உடையவள்.
குப்புசாமி ஏமாளியாய் இருப்பதைக் கண்டு அவ்வப்போது அவருடன் கடுமையாக இருந்துவிடுவாள்.அந்த ஊரிலேயே வேலம்மா ஒருவருக்குத்தான் குப்புசாமி கட்டுப்படுவார். பக்கத்து தெருவுல வேலம்மா குரலை கேட்டாலே கப்புசுப்புன்னு அமைதியாயிடுவாரு நம்ம குப்பு. கஷ்டம்னு சொல்லி யாராச்சும் வந்தா கை காப்ப கழட்டி கொடுக்கிற அளவுக்கு கொஞ்சம் தாராளகுணம் கொண்டவர். இவரோட குணத்தைப் பார்த்து ஏமாத்தி நிறைய பேர் வயிறு வளர்த்து வர்றது வேலம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது.
இப்படி ஒரு நாள் கஷ்டம்னு சொல்லி வந்தவங்களுக்கு என்ன ஏதுன்னு கேட்காம தன்னுடைய மோதிரத்தை தானம் கொடுத்ததை தெரிந்து, குப்புசாமியை தேடிட்டு இருந்த வேலம்மா கண்ணுல சிக்காம தெரு தெருவா ஓடி ஒளிஞ்சாரு குப்பு. அப்போ ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்த ஆலமரத்து அடியில வந்து உட்கார்ந்தார். கஷ்டம்னு சொல்லி வந்தவனுக்கு மோதிரத்தை கொடுத்தது ஒரு குத்தமானு தனக்குத்தானே புலம்பிக்கொண்டு இருந்த குப்பு , இதுவே ஒரு முருங்கைமரமாக இருந்தா வேதாளமாவது உட்கார்ந்து இருக்கும் அதுவாவது என் பொலம்பல கேட்டுட்டு இருக்கும். இந்த ஆலமரத்து கிட்ட சொல்லி என்ன ஆகப்போறதுன்னு நொந்துக்கிட்டாரு.
அப்போ திடீர்னு ஆலமரம், நானும் உன் புலம்பலை கேட்டுகிட்டு தான் பா இருக்கேன்னு பதில் சொல்லுச்சு. குப்புசாமி அப்படியே ஆடிப் போயிட்டாரு. ஐயோ பூதம் பூதம்னு கத்த ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கு அந்த ஆலமரம் நான் பூதமெல்லாம் இல்லப்பா, நான் ஒரு மந்திரவாதி. புதுசா ஒரு மந்திரம் கத்துக்கிட்டு இருந்தேன் அதை பரிசோதித்து பார்க்க போய் இப்படி ஆயிட்டேன்னு சொல்லுச்சு.
அப்படியா அது என்ன கதைன்னு,கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கேட்டாரு.அதுக்கு அந்த ஆலமரம், நான் ஒரு மந்திரவாதி என் மந்திர தந்திரம் எல்லாம் பிடிக்காத என் பொண்டாட்டி என்ன பலமுறை இதெல்லாம் வேண்டாம்னு எச்சரிச்சா. ஒருநாள் ஒரு புது மந்திரம் கத்துக்கிட்டு இருந்தேன். அதைப் பரிசோதித்து பார்த்திட்டு இருந்தப்ப இதைப் பார்த்த என் பொண்டாட்டி, என்ன அடிக்க கட்டையை எடுத்துட்டு துரத்திட்டு வந்தாப்பா.அவகிட்ட தப்பிக்க அந்த மந்திரத்தை சொல்லி ஆலமரத்து மேல ஏறணும்னு சொல்ல வந்து பதட்டத்துல ஆலமரமா மாறனும்னு சொல்லிட்டேன்.
அப்புறம் என்ன ஆச்சுபா னு கேட்ட குப்புகிட்ட,என் பொண்டாட்டி கிட்ட தப்பிச்சிட்டேன். ஆனா என்ன! நான் இந்த ஆலமரமா மாறிட்டேன்னு சொல்லுச்சு. குப்புசாமியால சிரிப்ப அடக்க முடியல ஒரு வழியா கட்டுப்படுத்தி அட பாவமே! இப்படி ஆயிடுச்சுன்னு உச்சு கொட்டுனாரு.
சரிப்பா நான் வேணும்னா உனக்கு உதவி செய்யவா என்றது ஆலமரம். அதற்கு குப்பு, நீயே உன்ன காப்பாத்த முடியாம மரமா நிக்கிற. எனக்கு எப்படி உதவுவாய் என்றார். முடியும்னு சொன்ன ஆலமரம், ஒரு மந்திரத்தை குப்பு கிட்ட சொல்லி இதை யார் முன்னாடி சொன்னாலும் அவங்க உனக்கு கட்டுப்பட்டு பூனையாட்டம் ஓங் சுத்தி வருவாங்க. ஆனா ஒரு விதிமுறை இருக்கு இத சொல்லும்போது தைரியமா சொல்லணும் அப்பத்தான் பலிக்கும்னு சொல்லுச்சு.
சந்தோசமா குப்புவும் அவர் பொண்டாட்டியைத் தேடி வந்து அவள்முன் இதெல்லாம் சொல்லணும்னு தயாரானார். வேலம்மாவும் வந்துட்டா, இப்போ மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கும்போது... வேலம்மா யோவ் உன்ன எங்கெல்லாம் தேடுறதுன்னு கடுகடுப்பான குரலில் பேச, குப்புவுக்கு கால் எல்லாம் நடுங்கி பயந்துட்டே மந்திரத்தை சொல்ல, நான் பேசிக்கிட்டே இருக்கேன் அங்க என்ன முணுமுணுக்குறன்னு சொல்லி அவர் காத ஒரு திருகு திருகுனா பாருங்க..
இதெல்லாம் தூரத்துல பாத்துட்டு இருந்த ஆலமரம் யோவ் குப்பு நான் தான் சொதப்புனேன்னு பாத்தா.. நீ என்ன விட தொடநடுங்கிப்பா ... அதுசரி எந்த மந்திர தந்திரமும் பொண்டாட்டி முன்னாடி செல்லாது போலன்னு சொல்லி விழுது குலுங்க குலுங்க சிரிச்சது.
(கரூர் மாவட்டம், வெள்ளையம்பட்டி கா.காயத்ரி தேவி (காயுகேசவ்), இடைநிலை ஆசிரியர். ஊ.ஒ.தொ.பள்ளி சோழதாசன்பட்டி, அரவக்குறிச்சி ஒன்றியம், கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 14 வருடம் ஆசிரியர் பணி அனுபவம். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வலர். தமிழ்த்தடாகம் இலக்கியக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்புப் புத்தகங்களில் கவிதைகளை எழுதியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் வானொலிப் புரவலராகவும், கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும் வருகிறார். தனது பள்ளி பணி அனுபவத்தில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளார்)