ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
ஜெர்மனி: ஐரோப்பிய நாடுகளில் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஜெர்மனியில் பதிவாகியுள்ள கடும் வெப்ப அலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம் காரணமாக அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாறு காணாத உயிரிழப்புகள் :
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கோடை காலத்தின் இறுதியில் தான் வெப்பத்தின் தாக்கம் குறித்த முழுமையான புள்ளி விவரங்கள் வெளியாகும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000-ஐ எட்டியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த எண்ணிக்கையானது ஜெர்மனியில் கடந்த காலங்களில் பதிவான உச்சபட்ச வெப்ப அலை உயிரிழப்புகளை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொளுத்தும் வெயில்:
கடந்த ஜூன் மாதத்தில் ஜெர்மனியின் பல பகுதிகளில் வெப்ப நிலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு 107.6°F வரை சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் நீடித்த இந்த தீவிர வெப்ப அலை, உடல்நலக் குறைபாடுகள் மற்றும் வெப்பத் தாக்குதல் (Heatstroke) காரணமாக அதிக அளவிலான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
சுற்றுச்சூழல் வல்லுநர்களின் எச்சரிக்கை :
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளையே இந்த கோர சம்பவம் உணர்த்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் கட்டமைப்பு ரீதியாக வெப்பத்தை சமாளிக்கும் வசதிகள் குறைவாக இருப்பதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க உடனடி காலநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.ஜெர்மனி அரசு தற்போது நிலவும் சூழ்நிலையை எதிர்கொள்ளப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பொதுமக்களுக்கான அவசரகால சுகாதார வழிகாட்டுதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.