பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300க்கும் மேற்பட்ட பொருட்களை ஆன்லைனில் ஏலம் விடவுள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று தொடங்கி காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி வரை இந்த ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம் விடப்படும் பொருட்களில் பவானி தேவி சிலை, அயோத்தி ராமர் கோயில் மாதிரி ஆகியவை அடங்கும். ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம் Namami Gange திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தின் நோக்கம் கங்கை நதியை தூய்மைப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது ஆகும்.
PM Mementos இணையதளத்தில் இந்த ஏலம் நடக்கும். பவானி தேவி சிலையின் ஆரம்ப விலை ரூ.1.03 கோடி. ராமர் கோயில் மாதிரியின் விலை ரூ.5.5 லட்சம். 2024 பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அணிந்த மூன்று ஜோடி காலணிகளும் ஏலத்தில் உள்ளன. இதன் விலை தலா ரூ.7.7 லட்சம்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்த பஷ்மீனா சால்வை, தஞ்சாவூர் ராமர் தர்பார் ஓவியம், உலோக நடராஜர் சிலை, குஜராத்தில் இருந்து ரோகன் கலைப் படைப்பு, நாகாலாந்து கைத்தறி சால்வை போன்றவையும் ஏலத்தில் உள்ளன. இந்த ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களின் விளையாட்டுப் பொருட்கள் ஏலத்தில் உள்ளன.
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பரிசுப் பொருட்கள் தற்போது புது தில்லியின் தேசிய நவீன கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரதமருக்கு வரும் பரிசுப் பொருட்கள் ஏலம் நடைபெறுவது இது முதல் முறையல்ல. 2019ம் ஆண்டு முதல் இது நடந்து வருகிறது. இதுவரை பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் கங்கை சுத்திகரிப்புத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.