இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

Su.tha Arivalagan
Sep 24, 2026,11:47 AM IST

சென்னை : நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெக.,விற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளைச் சேர்ந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களின் எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அதிமுக.,வில் இருந்து விலகி தவெக.,வில் வந்து இணைந்தனர். இதனால் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் வரும் அக்டோபர் 06ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றன. இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.




மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக.,விற்கு ஆதரவு அளிக்க போவதாக அதன் கூட்டணி கட்சியான பாஜக மட்டுமே தெரிவித்துள்ளது. ஆனால் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக, யாருக்கும் ஆதரவு கிடையாது என கூறி விட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மற்றொரு கட்சியான தமிழக மாநில காங்கிரஸ், ஆளும் கட்சியான தவெக.,விற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி ஜி.கே.வாசன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.


அதே சமயம் திமுக.,வை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்தும் ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் சில சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளன. இதனால் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தனித்து விடப்பட்டுள்ளன. மாறாக தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக தலைமையில், தேர்தலுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைக்கப்பட்டதுடன் அந்த கூட்டணியில் சென்று இணையும் கட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை ஒரு எம்எல்ஏ., கூட இல்லை என்றாலும் டெல்டா மாவட்டங்களில் அந்த கட்சிக்கு என்று குறிப்பிட்ட அளவிற்கு செல்வாக்கு உள்ளது. அது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான தமிழ் மாநில காங்கிரஸ், ஆளும் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதால் இனி வரும் இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தல்களில் தவெக கூட்டணியில் குறிப்பிட்ட இடங்களை கேட்டு பெறுவதற்கு வாய்ப்புள்ளது. விஜய்யின் செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தேர்தல்களில் வெற்றி பெற்றால் அந்த கட்சிக்கு வரும் காலத்தில் எம்எல்ஏ, எம்பி., உறுப்பினர்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.