Operation sindoor: விளக்கம் அளிக்க கனிமொழி தலைமையிலான குழு.. ரஷ்யா புறப்பட்டது!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க எம்.பி கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா செல்கிறது. இந்தக் குழு பயணத்தை முடித்த கொண்டு ஜூன் இரண்டாம் தேதி நாடு திரும்புகிறது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா பாகிஸ்தான் கட்டுப்பாடு கோடு எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இறங்கி வந்தது. அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடைபெற்று மெல்ல மெல்ல போர் பதற்ற சூழல் தணிந்தது.
என்னதான் பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு உரிய முறையில் எடுத்துரைத்து வருகிறது. அதன்படி, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அதற்காக பாஜகவை சேர்ந்த எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது .
ஒவ்வொரு குழுவிலும் எம்பிக்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த ஒவ்வொரு குழுவும் நான்கு அல்லது ஐந்து நாடுகளுக்குச் சென்று பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஐக்கிய ஜனதா தளம் எம்பி சஞ்சய் ஜா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் நேற்று ஜப்பான், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர்,உள்ளிட்ட நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தானின் அத்து மீறல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதலை எடுத்துரைத்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
இன்று எம்.பி கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றது. இந்த குழு ரஷ்யாவில் இருந்து பின்னர் ஸ்பெயின், லாத்வியா, சுலோவேனியா, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க இருக்கிறது. இந்த குழு பயணத்தை முடித்துக் கொண்டு பின்னர் ஜூன் இரண்டாம் தேதி இந்தியா திரும்புகிறது.