சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.54 கிலோ தங்கம்.. கோவில் துணை கமிஷனர் சஸ்பெண்ட்!
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் 4.54 கிலோ தங்கம் காணாமல் போனதாக எழுந்த புகாரில், தேவஸ்தான துணை ஆணையர் பி. முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்த சம்பவம் 2019 ஜூன் 17 அன்று நடந்தது. அப்போது முராரி பாபு சபரிமலையில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், கோவிலின் கருவறைக்கு இருபுறமும் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட துவாரபாலகர் சிலைகள் செப்புத் தகடுகளால் ஆனவை என்று தவறாகப் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடுமையான தவறு என்று தேவஸ்தான வாரியம் கூறியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெறும் வரை அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முராரி பாபு, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தனது அறிக்கை ஆரம்பகட்டமானது என்றும், நடைமுறைப்படி கோவில் தந்திரியிடம் ஆலோசனை பெற்ற பிறகே அதைத் தயாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த அறிக்கையில், செப்புத் தகடு என்று எழுதியிருந்தேன். ஏனென்றால் செப்பு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் அதை முலாம் பூச வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது என்றார் அவர்.
சபரிமலை தங்க காணாமல் போன வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம், பக்தர் உன்னிகிருஷ்ணன் பொட்டியின் ஸ்பான்சர்ஷிப்பில் கோவிலில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டபோது தங்கம் கணக்கில் வராமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் முராரி பாபுவின் சஸ்பெண்ட் நடவடிக்கை வந்துள்ளது.
இந்த விவகாரம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் புனிதமான சிலைகளில் இருந்து தங்கம் காணாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவஸ்தான போர்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.