ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

Meenakshi
Dec 15, 2025,05:11 PM IST

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியது.


சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. காலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மாலையில் மேலும் சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.




கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 விற்பனை ஆனது. இதனால் அப்போதே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என இல்லத்தரசிகள் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வந்தது. சரி இன்றும் கொஞ்சம் குறைந்தால் தங்கத்தை வாங்கி விடலாம் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை கதிகலங்கச் செய்துள்ளது.


தங்கம் விலை தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் புது உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிராம் 150 ரூபாய் என்று அளவில் இருந்தது. ஆனால் தற்போது தாறுமாறாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.200- ஐ தொட்டுள்ளது. சென்னையில் நேற்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.210-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலையில் ரூ.3 அதிகரித்தது ரூ.213க்கு  விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையிலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை செய்யப்படுகிறது.