போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 வது முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் தங்கம் விலை இன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக உலகளாவிய சந்தையில் பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தையில் நிலவும் சரிவு காரணமாக, பெரும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.
போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதும் தங்கத்தின் விலை உயர ஒரு மறைமுகக் காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த போர் பதற்றம் நீடித்தால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நகை வியாபாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்று காலையில் சவரனுக்கு ரூ.2400 அதிகரித்திருந்த தங்கம் விலை இன்று பிற்பகலில் 2வது முறையாக சவரனுக்கு 2,800 உயர்ந்துள்ளது. காலை, பிற்பகல் என இரண்டு நேரங்களையும் சேர்ந்து இன்று மட்டும் நகை விலை ரூ.5,200 உயர்ந்துள்ளது.