தங்கமே தங்கமே.. கொஞ்சம் இறங்கி வந்தது விலை.. புத்தாண்டுக்கு புதுசு வாங்கலாமே!
- கலைவாணி கோபால்
சென்னை: சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் வருடத்தின் கடைசி நாளான இன்று, 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.12,550 என்ற அளவில் விற்பனையாகிறது. 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்து 400 ஆக உள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ. 400 வரை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே கணிசமாகக் குறைந்து வருகிறது.
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனையான நிலையில், அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையும் விலை சரிவு தொடர்ந்தது. செவ்வாய்க்கிழமை சரிவு கிராமுக்கு ரூ.420 வரை குறைந்து, சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களில் மட்டும் மொத்தமாக சவரனுக்கு சுமார் ரூ.3,360 வரை குறைந்து, பொதுமக்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.258 (தோராயமாக) என்ற அளவில் விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை தற்போது சுமார் ரூ.2,58,000 என்ற நிலையை எட்டியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பதற்றத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தை நகர்வுகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தங்கம் விலை குறைய ஒரு தற்காலிக காரணமாகக் கூறப்படுகிறது.
நிபுணர்களின் கணிப்பு:
தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு தற்காலிகமானது மட்டுமே என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வரும் ஜனவரி மாதத்தில் பண்டிகைகள் மற்றும் திருமண விசேஷங்கள் வருவதால், தங்கம், வெள்ளி மற்றும் வைரத்தின் விலை மீண்டும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)