Gold rate.. தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.. பெரும் கவலையில் பெண்களைப் பெற்றோர்!

Su.tha Arivalagan
Sep 23, 2025,11:40 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. 


கடந்த ஆண்டு இறுதியில் ரூ.59 ஆயிரமாக இருந்த தங்கம் விலை, 9 மாதங்களில் ரூ.21 ஆயிரம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலையும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.


சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த வருடம் இறுதியில் ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், கடந்த 9 மாதங்களில் தங்கம் விலை அதிகமாக உயர்ந்துவிட்டது. சவரனுக்கு ரூ.21 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 6-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை தாண்டியது. இது புதிய உச்சமாக இருந்தது.




இப்படியே போனால் தங்கம் விலை சீக்கிரமே ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்று வியாாரிகள் கூறுகிறார்கள். அதற்கேற்ப தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 அதிகரித்தது. சவரனுக்கு ரூ.1,120 விலை உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-க்கும், ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தினமும் உச்சத்தை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ.149-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.


கடந்த 5 நாட்களில் தங்கம் விலை எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.


- 23.09.2025 ஒரு சவரன் ரூ.84,000 (இன்று)

- 22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440 (நேற்று)

- 21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320

- 20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320

- 19.09.2025 ஒரு சவரன் ரூ.81,840

- 18.09.2025 ஒரு சவரன் ரூ.81,760


தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.