ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

Meenakshi
Oct 14, 2025,05:31 PM IST

டெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தாகிறது.


கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவ உள்ளது. இதனை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1.3 லட்சம் கோடி மதிப்பு கொண்ட இத்திட்டம், 2026 முதல் 2030 வரை படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.


இந்த திட்டத்திற்காக டெல்லியில் கூகுள் நடத்திய பாரத் ஏஐ சக்தி என்ற நிகழ்வில் இந்த ஏஐ ஹப் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகின் 12 நாடுகளில் கூகுளின் சர்வதேச AI மையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மற்றும் கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




இது தொடர்பாக சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை அமைக்கவுள்ளது. இது குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்டு செல்லப்படும். இது ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.