இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

Su.tha Arivalagan
Jun 05, 2026,10:04 AM IST

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.


கொழும்புக்கு அருகிலுள்ள அங்குருவாதோட்ட பகுதியில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தீ பரவியதும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, அங்கு இருந்த பலரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.


அதிகாரிகளின் தகவலின்படி, 51 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.




விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், அந்த முதியோர் இல்லம் முறையான அனுமதிகள் இன்றி செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததாகவும் கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, அந்த இல்லத்தின் பொறுப்பாளரான இசுரு அனுஷ்கா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.


இலங்கையில் அண்மைக் காலங்களில் பதிவான மிகக் கோரமான தீ விபத்துகளில் ஒன்றாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல தரப்பிலிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.