பிளஸ் டூ பொதுத் தேர்வில்.. அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்..!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் 91.94% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும், பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு அடுத்த கட்டத்திற்கு செல்ல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் ஒவ்வொரு வருடமும் அதிக எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 95.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.76%, 2023 ஆம் ஆண்டு 94.03 சதவீதம், 2024 ஆம் ஆண்டு 94.56 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.47 சதவிகித அதிகரித்து, 95.03 சதவிகிதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 91. 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71%, தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.88 சதவிகிதம், இருபாலர் பள்ளிகளில் 95.30 சதவிகிதம், பெண்கள் பள்ளிகளில் 96.50 சதவிகிதம், ஆண்கள் பள்ளிகளில் 90.14 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில் மொத்தம் 92.86 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 140 பேர் எழுதிய இந்த தேர்வில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8,2019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 93.10 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.