தெலங்கானாவில் விபரீதம்.. அரசுப் பேருந்துடன் ஜல்லி லாரி மோதி.. பயங்கர விபத்து

Su.tha Arivalagan
Nov 03, 2025,11:50 AM IST

ஹைதராபாத்:  தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், ஜல்லி ஏற்றிச் சென்ற லாரியும் மோதிய விபத்தி்ல 19 பேர் மரணமடைந்தனர்.


ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா அருகே உள்ள மிர்ஜகுடா என்ற இடத்தில், ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியதில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். திங்கட்கிழமை காலை இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செவெல்லா காவல்துறை உதவி ஆணையர் பி. கிஷன் இதுகுறித்துக் கூறுகையில், தாண்டூர் பகுதியிலிருந்து செவெல்லா நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. லாரியில் ஜல்லிக் கற்கள் ஏற்றப்பட்டிருந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகளும் உயிரிழந்தனர். மொத்தமாக 19 பேர் உயிரிழந்ததாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.




லாரி வலது பாதையில் வந்து பேருந்து மீது மோதியுள்ளது. லாரி ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்றாரா அல்லது தவறான பாதையில் வந்தாரா என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.


இந்த விபத்து குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டலத்தில் நடந்த சாலை விபத்து குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வி


பத்து குறித்த முழு விவரங்களை அவ்வப்போது தெரிவிக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த அனைவரையும் உடனடியாக ஹைதராபாத் அழைத்து வந்து அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் தலைமைச் செயலாளர் மற்றும் DGP-க்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு அமைச்சர்களுக்கும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.