மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
- அ. வென்சி ராஜ்
உடல், மனம், சமூகம், ஆன்மீகம் என பல்வேறு பரிமாணங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு, தேவைகளுக்கு பதிலளிக்க உழைக்க வேண்டியது அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நபரின் மாண்பையும் அங்கீகரிப்பது திரு அவையின் நிலையான பொறுப்பாகும். அதுவும் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள் என்பதை திருத்தந்தை அவர்களின் செய்தி நமக்கு வலியுறுத்துகிறது..
யாரெல்லாம் மாற்றுத்திறனாளிகள்?
விதியையே மாற்றும் திறன் படைத்தவர்கள் தான் மாற்றுத்திறனாளிகள் என்பதே உண்மை. இன்றைய காலகட்டத்தில் நாம் மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு அணுகுகின்றோம், சமூகத்திற்கும் அவர்களுக்கும் இடையில் மனிதாபிமானம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆராய்வோம்.
இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி?
நம்மில் யாராவது இவர்கள் மட்டும் ஏன் இப்படி பிறந்திருக்கிறார்கள் என எண்ணி இருக்கின்றோமா? இவர்கள் இப்படி பிறப்பதற்கும், இருப்பதற்கும் யார் காரணம் என என்றாவது சிந்தித்தது உண்டா? இன்று சிந்திப்போம்..
மாற்றுத்திறனாளிகளில் இரு வகை உண்டு.
- ஒன்று பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகளாக பிறப்பவர்கள்.
- இரண்டாவது வகை இடைப்பட்ட காலகட்டங்களில் விபத்தினாலும், பிற காரணங்களினாலும் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்படுகிறவர்கள்.
இப்படி பிறக்க காரணம் என்ன?
இந்தக் கேள்விக்கு சரியான பதில் வேண்டுமானால் நாம் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஒரு குழந்தை பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறக்க காரணம் தான் என்ன?
நம்மில் பெரும்பான்மையானவர்களின் கருத்து என்னவென்றால் மாற்றுத்திறனாளிகள் ஏதோ பாவம் செய்தவர்கள். அதாவது அவர்களோ அவர்களின் தலைமுறையினரோ செய்த பாவத்திற்கான தண்டனை தான் அவர்களுக்கு இந்த பிறவியில் இப்படி ஒரு பிறப்பு என நினைக்கின்றோம். ஆனால் அது உண்மை இல்லை. அதற்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கின்றன என்பதே உண்மை.
- ஒரு பெண் கருத்தரித்து இருக்கும் பொழுது அவள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், உணவுப் பொருட்கள் ஆகியவை கலப்படமானதாகவோ தவறானதாகவும் இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தை தாயின் வயிற்றிலேயே பாதிக்கப்படுகிறது.
- கர்ப்பிணிப் பெண்கள் விபத்தையும், வேறு பல அசௌகரியங்களையும் சந்திக்கும் பொழுது குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறக்க வாய்ப்புள்ளது.
- நாம் விவசாயத்திற்காக தற்பொழுது பயன்படுத்தும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அதனால் வரும் பக்க விளைவுகளினால் கூட தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
- கர்ப்பிணிப் பெண்கள் கருவுற்றிருக்கும் சமயத்தில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் ஆகியவற்றிற்காக அதிக அளவில் மன வருத்தம், மன அழுத்தம் ஏற்படும் பொழுதும், மனதளவில் பாதிக்கப்படும் பொழுதும் அவள் வயிற்றில் உள்ள குழந்தையிடம் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
- குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது கரு வேண்டாம் என கரு கலைப்பிற்காக பயன்படுத்தும் மாத்திரைகளினால் கூட அந்த குழந்தையின் உடல் உறுப்புகள் பாதிக்க வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.
- சில பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் நீரில் கலப்பதாலும், காற்று மாசுபடுவதாலும், உணவு கலப்படத்தினாலும் அதை உட்கொள்ளும், சுவாசிக்கும் தாய்மார்களால் வயிற்றில் உள்ள குழந்தை பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.
- குடும்ப மரபியல் காரணமாகவும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
ஆக, மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது அவர்களுடைய குற்றம் அல்ல. சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்கள் மேல் செலுத்தும் ஆதிக்கமே அந்த குழந்தைகள் அவ்வாறு பிறக்க காரணமாகிறது என்பது புலனாகின்றது.
இடையில் ஏற்படும் பாதிப்பு இன்னும் கொடுமை
பிறப்பினால் ஏற்படும் பாதிப்பு கொடுமை என்றால் வாழ்வின் இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் பாதிப்பு அதைவிட கொடுமை. நடக்கவோ, பேசவோ, எழுதவோ, பார்க்கவோ முடிந்த ஒருவருக்கு திடீரென விபத்தின் காரணமாகவோ உடல்நிலை குறைவினாலோ ஏற்படும் பாதிப்பானது அவர்களை மிகப் பெரும் மனப்போராட்டத்திற்கு உள்ளாக்குகின்றது. இதுவரை நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கை திடீரென இப்படி மாறிவிட்டது என்னும் மனநிலையில் இருந்து அவர்களை மாற்றுவது மிகக்கடினம். இவர்களுடைய பாதிப்பிலும் சமூகத்தின் பங்கு இருக்கத்தான் செய்கிறது. தான் பலருக்கு உதவியது போக தனக்கு பலர் உதவ வேண்டியுள்ளது என்னும் மனநிலை அவர்களை மனம் வாடி வருந்த செய்கிறது.
சமூகத்தின் பார்வை
இது இப்படி இருக்க நம் சமூகமும் அவர்களுக்கு இருக்கும் மன பாதிப்புகளை பற்றி சற்று கூட யோசிக்காமல் அவர்கள் மேல் இன்னும் பல அழுத்தங்களையும், வேதனைகளையும் அல்லவா அள்ளி வைக்கின்றது. இதை நாம் சற்று சிந்தித்தே ஆக வேண்டும்.
நம் முன்னாள் முதல்வர் டாக்டர். மு.கருணாநிதி அவர்கள் ஊனமுற்றோர் என அழைக்கும் அந்த வார்த்தை வேண்டாம் எனக் கூறி, அவர்களுக்கும் பல திறமைகள் இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்கச் சொன்னார். மனித நேயம் என்னும் மகத்தான பண்பு இருந்தால் மட்டுமே ஒருவரால் இப்படி சிந்திக்க முடியும். மூத்த தமிழ் அறிஞர் அவர்களின் இந்த நல்லெண்ணத்திற்காக நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம். எவ்வளவு அருமையான ஒரு சிந்தனை..
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது...
- உடல் குறைபாடு
- கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளுவதில் சிரமம்.
- பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள்.
- இவர்கள் மீது நிலவும் சமூக பாகுபாட்டை எதிர்கொள்ளுதல்.
- குடும்பம் மற்றும் சமூகம் இவர்களை வேறுபடுத்தி பார்ப்பதால் ஏற்படும் மனச்சிக்கல்.
- பிறரின் கேலி, கிண்டல், உதாசீனப்படுத்தல்களைத் தாண்டி வருவதில் ஏற்படும் மனப்போராட்டம்..
இப்படி இவர்கள் பல சவால்களை எதிர்கொண்டு அவற்றைத் தாண்டி வர வேண்டி இருக்கிறது. இதில் ஒரு சிலர் தன் குறைபாட்டை துச்சமென நினைத்து பல சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளும் மனிதாபிமானமும்
மாற்றுத்திறனாளிகளும் மனிதாபிமானமும் என்பது ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த வார்த்தை. மாற்று திறனாளிகள் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உதவிகளும் வேலை வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே மனிதாபிமானத்தின் அடிப்படை. மாற்றுத்திறனாளிகள் மீது இன்று சமூகம் வைத்திருக்கும் கண்ணோட்டமானது முற்றிலும் மாறி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.
- நமது அரசும் நல்ல பல அமைப்புகளும் மாற்றுத்திறனாளிகளுக்காக பல முயற்சிகளை எடுத்து அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உதவி வருகிறது.
- பேருந்தாக இருக்கட்டும் புகைவண்டியாக இருக்கட்டும் அனைத்திலேயுமே மாற்றுத்திறனாளிகளுக்காக தனி இருக்கையில் ஒதுக்கி இருப்பது அவர்கள் மேல் அரசிற்கு இருக்கும் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு தான்.
- மாற்றுத்திறனாளிகளுக்காக தனி பள்ளிகள் இருந்தது போக இன்று வழக்கமான பள்ளிகளிலேயே பிற மாணவர்களுடன் இணைந்து அவர்களும் கல்வி கற்கும் நிலையை அரசு ஏற்படுத்தி இருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.
- இது அவர்கள் மேலும் தன்னம்பிக்கையோடு இயங்குவதற்கு வழிவகை செய்கிறது என்பதே உண்மை.
- மாற்றுத்திறனாளிகளுக்காக நம் அரசு பல அரசாணைகளையும் பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.
- மாற்றுத்திறனாளிகளுக்காக பேருந்து மற்றும் புகைவண்டிகளில் சிறப்பு சலுகைகளும் அவர்கள் நலனுக்காக உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றது.
இவை எல்லாமே அவர்கள் மீது கொண்டுள்ள மனிதாபிமானத்தினால் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்னும் என்ன செய்யலாம்?
- மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக் கூடிய வகையில் பொது இடங்கள் போக்குவரத்து சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் மீது நிலவும் சமூக பாகுபாட்டை முற்றிலுமாக அகற்ற வேண்டும். அவர்களும் சமூகத்தில் சமமாக மதிக்கவும், நடத்தப்படவும் வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளையும் உதவிகளையும் ஆதரவையும் இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.
- அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் இந்த சமூகம் தான் வழங்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளும் நம் சமூகத்தில் ஒரு அங்கம் தான். எனவே அவர்கள் மரியாதையுடனும் கௌரவத்துடனும் நடத்தப்பட வேண்டும்.
- உதாசினங்களை உரு குலைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
முடிக்க மனமின்றி
மேற்சொன்ன கருத்துக்களை நம் மனதில் நிறுத்தியவர்களாய் நம்மோடு வாழும் மாற்றுத்திறனாளிகளை மனிதர்களாக பார்க்கும் மனப்பக்குவத்தை நாம் பெறவேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் தந்து அவர்களும் வாழ்வில் எல்லாவிதமான மகிழ்ச்சியினையும் அனுபவிக்க உதவி செய்வது நம் கடமை. மிகச் சரியான வழி நடத்துதலும் உதவியும் இருக்கும் பட்சத்தில் மாற்றுத்திறனாளிகளும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் சகஜமாக அள்ளிக் குவிப்பர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எனவே மனிதாபிமானத்தோடு செயல்பட்டு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்ற நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுப்போம்.
(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)