தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

Meenakshi
Sep 06, 2025,04:58 PM IST

சென்னை: என்னை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கடந்த சில மாதங்களாகவே அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இந்நிலையில், நேற்று அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றால் அதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே அதிமுக.,வால் மீண்டும் வெற்றி பெற முடியும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பல்வேறு கட்சிளை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.


இதனையடுத்து. இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 7 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுகம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.


இது குறித்து செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தருமம் தழைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை வெளிப்படுத்தினேன். பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.