கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்

Su.tha Arivalagan
Jul 02, 2025,05:44 PM IST

டெல்லி: கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 4 லட்சம் பராமரிப்புத் தொகையாக தர வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நீதி வென்றுள்ளதாக ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பந்து வீச்சாளராக வலம் வருபவர் முகம்மது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜஹான். இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த உறவு பின்னர் கசந்து போனது. இருவரும் பிரிந்தனர். பரஸ்பரம் புகார்களைக் கூறி வந்தனர். இதையடுத்து விவாகரத்து கோரிய வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் தற்போது முக்கிய உத்தரவாக, மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதந்தோறும் ஷமி, ரூ. 4 லட்சம் பராரமிப்புத் தொகை வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக ,கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ₹1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட பராமரிப்புத் தொகை, தற்போது வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இது மிகப் பெரிய தொகை, ஷமிக்கு இப்படி ஒரு தண்டனை கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




ஆனால், இந்த உத்தரவு குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார். ஷமியின் வருமானம், அவரது மகளின் எதிர்காலம், மற்றும் பிரிவதற்கு முன் அவரது மனைவி ஹசின் ஜஹான் அனுபவித்த வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.


"எதிர் தரப்பினர்/கணவரின் வருமானம், நிதி வெளிப்பாடு மற்றும் வருவாய் ஆகியவை அவர் அதிக தொகையை செலுத்தக்கூடிய நிலையில் உள்ளார் என்பதை நிரூபிக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தையுடன் தனியாக வாழும் மனுதாரர் மனைவி, திருமணத்தின் போது அனுபவித்த பராமரிப்புத் தொகையையும், தனது எதிர்காலத்தையும், குழந்தையின் எதிர்காலத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரு நியாயமான பராமரிப்புத் தொகையையும் பெற உரிமை உண்டு" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


இந்த தீர்ப்பு குறித்து ஹசின் ஜஹான் கூறுகையில், ரூ.4 லட்சம் பராமரிப்புத் தொகையாக இறுதி செய்யப்பட்டதற்கு நன்றி. எனது  மகளை ஒரு சிறந்த பள்ளியில் சேர்க்க உதவும். முன்பு அது சாத்தியமில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் எனது உரிமைகளுக்காகப் போராடும்போது நான் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துவிட்டேன். எனது மகளை ஒரு சிறந்த பள்ளியில் சேர்க்க முடியவில்லை. நீதிமன்றத்திற்கு நான் நன்றி சொல்கிறேன்.


திருமணத்திற்கு முன்பு நான் மாடலிங் மற்றும் நடிப்புத் துறையில் இருந்தேன். என் கணவர் ஷமி என் தொழிலை விட்டுவிடச் சொன்னார். நான் ஒரு இல்லத்தரசியாக மட்டுமே வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். ஷமியை நான் மிகவும் நேசித்ததால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். ஆனால், இப்போது எனக்குச் சொந்தமாக வருமானம் இல்லை. எங்கள் பராமரிப்புக்கான அனைத்து பொறுப்பையும் ஷமி ஏற்க வேண்டும். அவர் இதை மறுத்ததால்தான் நாங்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. நமது நாட்டில் மக்கள் தங்கள் பொறுப்புகளை ஏற்க உத்தரவிடும் சட்டம் இருப்பது கடவுளுக்கு நன்றி.


ஒருவருடன் உறவில் நுழையும்போது, அவர்கள் மோசமான குணம் கொண்டவர்கள், குற்றவாளிகள் அல்லது உங்கள் மற்றும் உங்கள் மகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் என்பது அவர்கள் முகத்தில் எழுதப்பட்டிருக்காது. நானும் இப்படித்தான் பாதிக்கப்பட்டேன். கடவுள் மிகப்பெரிய குற்றவாளிகளையும் மன்னிப்பார். 


என் மகளின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும், மகிழ்ச்சியையும் அவரால் காண முடியவில்லை. ஹசின் ஜஹானின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்ற தனது பிடிவாதத்தையும் அவர் கைவிட வேண்டும். நான் நீதியின் பாதையில் இருப்பதால், அவர் என்னை அழிக்க முடியாது, அதேசமயம் அவர் அநீதியின் பாதையில் இருக்கிறார் என்றார் அவர்.