சென்னையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த தூய்மைப் பணியாளர்கள்.. கைது
சென்னை : சென்னையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டலங்களில் தூய்மை செய்யும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பழைய ஊதியத்தை தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அனுமதியின்றி நடத்தும் போராட்டத்தால் நடைபாதையில் நடப்பதற்கு இடையூறாக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்து, போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசாருக்கு கோர்ட் அறிவுறுத்தியது. இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பிறகு விடுவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக கைது செய்து, போலீசார் அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.