வார்த்தைகள் இன்றி .. வெட்கத்தில் காதல் இசையை பரப்பிய.. இலையின் இதயம்!

Su.tha Arivalagan
Apr 08, 2025,02:47 PM IST

- தேவி


பார்வைகள் குளமாக மாறியது.....

விழியின் ஓரம் தேங்கிய நீர்

ஏரிகளாக மாறி உருண்டு ஓடியது....

அது ஆனந்தத்தின் வெள்ளம்!


இதயத் துடிப்புகள்  

யுத்தம் செய்ய தொடங்கின...

தனிமை உண்மையை உரைத்தது....


அவளது நினைவுகள் 

மனதை பிழிந்து  எடுக்க ஆரம்பித்தது..... 

பேசிய வார்த்தைகள் 

மௌனமாக மறைந்து ஒலித்தன...

தென்றல் காற்றும் 

என்னை சுடுவதாக தோன்றியது.... 

மேகங்களும் கருத்து திரண்டு மூட்டமாக மாறின




பார்வைகள் பரவசமாகி 

இதழ்களில் படிந்திருக்கும் துளியாக 

கண்களைக் கவர்ந்தது மலரின் காதல்......

அவளின் விழி ஓரங்களை 

குத்தகை எடுத்து

சுருக்கங்களாக காட்சி அளித்தது 

விரியும் மொட்டுக்கள்...... 


தென்றலினை 

தன் கூந்தலின் இசையில் 

கட்டி போடும் மழையாக 

பொழிந்தது மலரின் தேன் துளி.....

  

வார்த்தைகள் இன்றி 

ஓசைகளாக உரசி சென்ற 

பறவைகளைக் கண்டு 

வெட்கத்தில் காதல் இசையை பரப்பியது  

இலையின் இதயம்...... 


பேச வார்த்தைகள் இருந்தும் 

காதலை பார்வையில் மட்டும் கடத்தி 

மௌனத்தை மொட்டாக 

பரவ விடும் மலரின் இதழ்.....


மனதினை மயக்கி 

பார்வையை ருசித்து 

தேகத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்தது   

மலரின் மெல்லிதழ் புன்னகை....


தேன் சுவை ஊட்டும் 

அவளது இதழ்களை 

தொட்டணைத்து வட்டமிடும் துளியினை  போல 

மனதினை கட்டி அணைத்து முத்தமிடுகின்றது  

மலரினை தொட்டுத் தழுவும் காதல் துளிகள்...


கொடியின் இடையில் 

தவழும் துளிகளைப் போல 

மலரின் இடையிலும் 

மலர்ந்த துளிகளை கண்டு 

மனம் மயங்கத் தொடங்குகின்றது.....


இதழ் மொட்டுக்களை 

மனம் வெறுப்பதில்லை 

மலரின் மொட்டுக்களை 

மானம் மறப்பதில்லை


காதலின் ஆழத்தை 

கண்களை கண்டு ருசிக்க முடியும் 

மலரின் காதல் மௌனத்தை 

தழும்பும் அழகினை கொண்டு பருக  முடியும்


நித்தம் நித்தம் தேன் சுரக்கும் 

அவளின் இதழ்களின் வரிகளை 

கண்கள் துளைக்க  மறந்ததில்லை 

அதுபோல பார்வையைத் திருடும் 

மலரின் வகிடுகளை 

மனதில் புதைக்க மறப்பதில்லை!