More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்

Su.tha Arivalagan
Sep 04, 2025,03:36 PM IST

சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 08ம் தேதியும், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 09ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஏற்கனவே இந்தியாவின் வட மாநிலங்களான டில்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நர்மதை உள்ளிட்ட பல முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய அளவை தொட்டு, ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக பல பகுதிகளிலும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. 




கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது. தற்போது வரை சென்னையின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என்றும், செப்டம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.