Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு எந்த வாகனமும் செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாகப் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டுக் கொண்டும் இருப்பதால் அப்பகுதியின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த அதி தீவிர மழை காரணமாக கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மூன்று முக்கிய இடங்களில் திடீரெனப் பலத்த மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, பி.எல்.செட் மற்றும் சவரிக் காடு ஆகிய பகுதிகளில் மலைகளில் இருந்து வெள்ள நீர் பெருக்கெடுத்துச் சாலைக்கு வந்ததால், பெரிய பாறைகளும் மண் திரள்களும் சரிந்து விழுந்து சாலையை முற்றிலும் மூடிவிட்டன. இதன் விளைவாகப் பழனி வழியிலான போக்குவரத்து தற்பொழுது முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலையின் குறுக்கே பாறைக்கற்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சாலையின் மறுபுறத்திற்கு எந்தவொரு வாகனமும் செல்ல முடியாதவாறு பாதைகள் முற்றிலுமாக அடைபட்டுள்ளன.
மேலும் கொடைக்கானல் மலைப் பகுதியில் பல இடங்களில் மரங்களும் விழுந்து கிடக்கின்றன. மண் பாறைகளும் சரிந்து கிடப்பதால் போக்குவரத்து முழுமையாக இல்லை. அவற்றை அப்புறப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்துள்ள பாறைகளையும் மண்ணையும் உடனடியாக அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் அவதியைக் கருத்தில் கொண்டு, பாறைகளை அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.