அடடா மழைடா.. தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கன மழைக்கு வாய்ப்பு தெரியுமா..?
சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு நிலவி வருவதால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் குளுமையான சூழல் நிலவுகிறது. குறிப்பாக நேற்று ஓசூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் ஏற்கனவே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்று சுழற்சி உருவாகி உள்ள நிலையில், கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை அதாவது 21ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக கூடும்.இதன் காரணமாக 22 ஆம் தேதி வாக்கில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாக கூடும்.பிறகு அது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
இன்று கனமழை:
கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மிக கனமழை:
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அங்கு 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை:
வடதமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.