தமிழகத்தில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

Su.tha Arivalagan
Feb 19, 2026,06:02 PM IST

சென்னை: தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பிப்., 21ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வழுவிழக்கக்கூடும்.


பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகக்கூடும். இதன் காரணமாக,




இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


பிப்., 21ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் விசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.


பிப்., 22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மினினலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.


பிப்., 23 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை வானிலை முன்னறிவிப்பு


 இன்று (19-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


நாளை (20-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.