வெயிலுக்கு இதமாக... வரும் 11ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
Mar 08, 2025,06:16 PM IST
சென்னை: தமிழகத்தில் வரும் 11ம் தேதி (செவ்வாய் கிழமை) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்த வேளையில், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அறிவிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 10ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 11ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும்,12ம் தேதி சில இடங்களிலும், 13ம் தேதி ஒரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.