இருண்டது வானம்.. சட்டென்று மாறிய வானிலை.. சென்னையை குளிர்வித்த கனமழை.. மக்கள் மகிழ்ச்சி!

Manjula Devi
Apr 16, 2025,11:58 AM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் சமீப காலமாகவே கோடை வெயில் கொளுத்திய நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன முதல் மிதமான மழை  பெய்து வருகிறது. இதனால் குளுமையான சூழல் நிலவி வருகிறது.


மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.


பல வானிலை மாற்றங்கள் நிகழ்வதால் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய ஒரு மணிக்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.




அதன்படி, தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 

எம்.ஆர்.சி நகர், மெரினா, மந்தவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், கிண்டி, அசோக் நகர், மதுரவாயில், மாதவரம், ஆவடி, புழல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது.


பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆவடியில் பலத்த சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. சூறைக்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மாநகராட்சியில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் காற்றில் கீழே விழுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.


சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு பகுதிகளில் சமீப காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.