தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன்பணத்தை நடிகர் ரவி மோகன் திரும்ப அளிக்காதது குறித்த வழக்கில், ரூ.5.59 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐகோர்ட்டில், பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ரவிமோகன் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ. 6 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டது. அந்த பணத்தை திருப்பித்தரும் படி கேட்டோம். அதற்கு அதற்கு அவர் முன்பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் கூறினார். ஆனால் இதுவரையில் முன்பணம் ரூ.6 கோடியை திருப்பித்தரவில்லை என்று அந்த படத்தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் ரவி மோகன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கை 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனையடுத்து, படத்தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ரவி மோகன் தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாக கூறினார். இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் 2 பேர் தாக்கல் மனுவையும் விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை நியமிப்பதாக நீதிபதி தெரிவித்தார். 9 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், வேறு படங்களை வெளியிடவும் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.