பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது
Nov 24, 2025,03:29 PM IST
மும்பை: பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89. இவர் இந்திய திரைப்படத்துறையில் மிக வெற்றிகரமான நடிகர்களுள் ஒருவர். 1975ல் இவர் நடித்த ஷோலே திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சிறப்பு பெற்றது.
இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளர், அரசியல்வாதியும் ஆவார், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்தியில் பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், சமீபத்தில் தர்மேந்திரா காலமானதாக செய்திகள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி மற்றும் அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உறுதிபடுத்தினர்.
இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அறிந்த திரை பிரபலங்கள் தர்மேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.