பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் நிதீஷ் குமார்.. அமித்ஷா புகழாரம்

Su.tha Arivalagan
Oct 18, 2025,06:27 PM IST

பாட்னா: பீகார் மாநிலம் சாரண் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  லாலு பிரசாத் யாதவின் "காட்டுராஜ்யத்தை" முடிவுக்கு கொண்டு வந்ததற்காக முதல்வர் நிதிஷ் குமாரை பாராட்டினார். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும், நிதிஷ் குமாரின் தலைமையின் கீழ் தேர்தல் சந்திக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


சாரண் மாவட்டத்தில் உள்ள தரையா தொகுதி எம்.எல்.ஏ ஜனக் சிங் மற்றும் அம்னூர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணன் குமார் மன்தூ ஆகியோரை ஆதரித்து அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசியபோது,  கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் நிலவிய லாலு பிரசாத் யாதவின் "காட்டுராஜ்யத்தை" முடிவுக்கு கொண்டு வந்தத முதல்வர் நிதிஷ் குமாரை பாராட்டுகிறேன். சாரண் மாவட்டத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும்போது, வெற்றி மட்டுமே தெரிகிறது. 


லாலு மற்றும் ராப்ரியின் காட்டுராஜ்யத்தை பீகாரின் இளைஞர்களுக்கு நினைவூட்டவும், அதற்கு எதிராக போராடவும் சப்ரா, சாரண் மாவட்டத்தை விட சிறந்த இடம் எதுவும் இல்லை.  நிதிஷ் குமார் பீகாரை காட்டுராஜ்யத்தில் இருந்து விடுவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக பீகாரை மேம்படுத்த உழைத்துள்ளார். பிரதமர் மோடியின் 11 ஆண்டுகள் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.




நான் உங்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். நாங்கள் நிதிஷ் குமாரின் தலைமையின் கீழ் பீகார் தேர்தலை சந்திக்கிறோம், அதே நேரத்தில் பிரதமர் மோடி கூட்டணியின் மைய நபராக இருக்கிறார். இந்த ஆண்டு பீகார் நான்கு முறை தீபாவளியை கொண்டாடப்போகிறது என்றார்.


அமித்ஷாவின் பேச்சின் மூலம் நிதீஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிறுத்துவது உறுதியாகியுள்ளது. 


243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபை நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.