Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

Su.tha Arivalagan
Apr 22, 2026,11:28 AM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


இன்றைய உலகத்தில் Men’s Day, Women’s Day, Children’s Day, Parents’ Day, Workers’ Day என்று பல தினங்களை நாம் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த கொண்டாட்டங்களின் உண்மையான அர்த்தம் எல்லோருக்கும் சமமாக சேருகிறதா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.


பொதுவாக “Workers’ Day” என்றாலே நம்முடைய நினைவில் வருவது, காலை வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்துக்குப் போய் வேலை செய்து சம்பளம் சம்பாதிக்கும் மனிதர்கள்தான். ஆனால் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து கொண்டு இருக்கும் பெண்களின் உழைப்பு பற்றி நாம் எவ்வளவு யோசிக்கிறோம்?


ஒரு வீட்டை அழகாக இயங்கச் செய்வதில் அவர்களின் பங்கு அளவிட முடியாதது. காலை எழுந்தவுடன் குடும்பத்தினருக்கான உணவு, குழந்தைகளின் தேவைகள், வீட்டின் ஒழுங்கு, அனைவரும் சுலபமாக வெளியே சென்று வேலை பார்க்கும் சூழல்—இந்த எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் அமைதியான உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.


வீட்டில் இருப்பவர்கள் “சும்மா தான் இருக்கீங்களே!” என்ற ஒரு வார்த்தையால் அவர்களின் உழைப்பு சில நேரங்களில் மதிப்பிழக்கிறது. ஆனால் உண்மையில் பார்த்தால், வீட்டை நிர்வகிப்பது ஒரு முழுநேரப் பொறுப்பு. சம்பளம் இல்லாமல், விடுமுறை இல்லாமல், ஓய்வு நேரம் கூட இல்லாமல் செய்யப்படும் உழைப்பு அது.




அலுவலகத்தில் இருக்கும் வேலைப் ப்ரஷர் போலவே, வீட்டை பார்த்துக்கொள்வதிலும் பல பொறுப்புகள் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த உழைப்புக்கு சம்பளம் கிடைக்காது என்பதற்காக அது சிறியது என்று நினைப்பது தவறு.


குடும்பத்தில் சிறிய மாற்றம் ஒன்று நடந்தாலே போதும். “நீங்களும் ரொம்ப கஷ்டப்படுறீங்க”, “நீங்கள் செய்வது பெரிய வேலை”, “நன்றி” போன்ற ஒரு சில அன்பான வார்த்தைகள் கூட அவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக மாறும்.


ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில், அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் உழைப்பையும் மதிக்க வேண்டும். குறிப்பாக அமைதியாக குடும்பத்தை தாங்கி நிற்கும் வீட்டுத்திருமணிகளின் உழைப்பை புரிந்து கொண்டு அவர்களுக்கு மரியாதை கொடுப்பது மிகவும் முக்கியம்.


ஏனெனில், ஒரு வீட்டை நடத்துவது வேலை அல்ல என்று யாராவது நினைத்தால், அது அந்த வீட்டின் மிகப்பெரிய உழைப்பை காணாமல் போவது தான்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)