தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி மிரட்டியதாக.. யூடியூபர் IPDS திருநாவுக்கரசு, 2 திமுகவினர்அதிரடி கைது
கரூர்: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பிரபல யூடியூபர் IPDS திருநாவுக்கரசு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் கட்சி தாவுமாறு பேரம் பேசி மிரட்டியதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தற்போது திமுகவைச் சேர்ந்த மேலும் 2 பிரமுகர்களையும் கரூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடப்பதாக சில நாட்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது. திமுக அதிமுக இணைந்து ஆட்சியமைக்க நேற்று காலை வரை முயற்சிகள் செய்ததாக நேற்றுதான் அமைச்சர் நிர்மல்குமாரும் கூறியிருந்தார். இந்த நிலையில் குதிரைபேரம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இளையராஜா. இவரை தவெக கட்சியிலிருந்து விலகி, வேறு ஒரு அரசியல் கட்சியில் இணையுமாறு யூடியூபர் IPDS திருநாவுக்கரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வேறு கட்சியில் இணைவதற்காக அவரிடம் பேரம் பேசி, தொடர்ந்து மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வேறு கட்சியில் இணையக்கூறி யூடியூபர் IPDS திருநாவுக்கரசு தனக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா காவல்துறையில் முறைப்படி புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், பேரம் பேசி மிரட்டல் விடுத்த புகாரில் யூடியூபர் IPDS திருநாவுக்கரசை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தவெக கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
திருநாவுக்கரசு கொடுத்த தகவலின் பேரில் தற்போது திமுக பிரமுகர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் என்ற இருவரை போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இந்த இருவரும் திமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குதிரைபேர விவகாரம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த இருவர் கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.