Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

Su.tha Arivalagan
Jun 22, 2025,10:11 AM IST

சான்டா கேடரினா, பிரேசில்: பிரேசில் நாட்டில் ஹாட் ஏர் பலூன் நடு வானில் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்த சோகமான சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.


தெற்கு பிரேசிலில் உள்ள சாண்டா கேடரினா மாநிலத்தைச் சேர்ந்த பிரையா கிராண்டே நகரில், 21ம் தேதி 21 பேருடன் ஒரு ஹாட் ஏர் பலூன் சாகசத்திற்காக கிளம்பிச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக பலூனில் தீப்பிடித்துக் கொண்டு நடு வானிலிருந்து கீழே தீப்பிழம்பாக விழுந்தது. 


பறந்துகொண்டிருக்கும் போதே பலூனில் தீப்பற்றியதாகத் தகவல்கள் கூறுகின்றன. பலூன் தீப்பிடித்த நிலையில் கீழ் நோக்கி வந்தபோது அதிலிருந்து சிலர் கீழே குதித்துள்ளனர். இதனால் அவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். குதிக்க முடியாதவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.




மொத்தம் இருந்த 21 பேரில் 13 பேர் காயங்கள், தீக்காயங்கள், படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். 8 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இந்த பலூனை செலுத்திய பைலட்டும் கூட கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார். முதலில் பலூனுக்குள் தீ பரவியதைப் பார்த்த தான் உடனடியாக பலூனை கீழே இறக்க முயற்சித்ததாகவும், ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


பலூன் தரையை நோக்கி வேகமாக வந்தபோது பலூனில் இருந்தவர்களை கீழே குதிக்குமாறு தான் கூறியதாகவும், சிலரால் குதிக்க முடியாமல் போனதாகவும் அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். வானிலை மோசமாக இருந்ததால்தான் விபத்துக்கு முக்கியக் காரணமாகி விட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதில் மனிதத் தவறு இருக்கிறதா என்பது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.