சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
- தெ.நாராயண லெட்சுமி, B.E
வார இறுதியில் எல்லோருடைய வீட்டிலும் பெரும்பாலும் காலை உணவாக பூரி மசாலா தான் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த பூரி மசாலாவை, ஹோட்டலில் கிடைப்பது போலவே வீட்டிலும், அதே சாஃப்ட் பூரி மற்றும் சுவையான கிழங்கு மசாலாவுடன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதோ சில டிப்ஸ் மற்றும் செய்முறை விளக்கம்...
மென்மையான பூரிக்கான சீக்ரெட் டிப்ஸ்
1 பூரி மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது ரொம்ப தளர்வாகவோ பிசையக்கூடாது. மாவை பிசையும்போது, முதலில் மாவுடன் சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து, பின்னர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். மாவு கையால் தொட்டால் ஒட்டக்கூடாது.
2. மாவை பிசைந்த பிறகு, அதனை ஒரு 20-30 நிமிடங்கள் ஈரத் துணியால் மூடி ஊற வைக்க வேண்டும். இது பூரி மென்மையாக வர உதவும். ஆனால் அதிக நேரம் ஊற வைக்கவும் கூடாது.
3. பூரியை தேய்க்கும்போது, ஒரே சீராக, அதாவது எல்லா பக்கமும் ஒரே அளவில் தேய்க்க வேண்டும். ரொம்ப மெலிசாக தேய்த்தால் பூரி உப்பாது, ரொம்ப தடிமனாக தேய்த்தாலும் உள்ளே வேகாது. தேய்க்கும்போது மாவை ரொம்ப அழுத்தக்கூடாது, மெதுவாக தேய்க்க வேண்டும்.
4. எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். பூரியை எண்ணெயில் போடும்போது எண்ணெய் சூடாக இருக்க வேண்டும், ஆனால் கருகிவிடக்கூடாது. பூரியை எண்ணெயில் போட்டதும், அது உப்பி மேலே வரும் வரை கரண்டியால் மெதுவாக எண்ணெய் மேல் தெளிக்கலாம் அல்லது கரண்டியால் லேசாக அமுக்கினால் சீக்கிரம் உப்பி வரும்.
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா ரெசிபி
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு: 3 (வேகவைத்து, மசித்தவை)
வெங்காயம்: 2 (நீளமாக நறுக்கியவை)
தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது: 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்: 2-3 (கீறியவை)
கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள்: சிறிதளவு
மஞ்சள் தூள்: ½ டீஸ்பூன்
மிளகாய் தூள்: 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு: தாளிக்க (தலா ½ டீஸ்பூன்)
எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
தண்ணீர்: தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
3. மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மசாலாவை 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
4. மசாலா கெட்டியானதும், கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
சுவையான ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசாலா தயார்!
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)