சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சென்னை: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஊர்களில் ஹோட்டல்களை மூட ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக பெங்களூரில் இன்று முதல் ஹோட்டல்கள் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டனர். இதேபோல சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வழங்கப்படும் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், எரிவாயு விநியோகம் சீராகவில்லை என்றால் செவ்வாய்க்கிழமை முதல் ஹோட்டல்கள் மூடப்படலாம் என்று எச்சரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னை மற்றும் மும்பையிலும் உணவகங்களின் செயல்பாடு முடங்கும் அபாயம் உள்ளது. சென்னையில் சில ஹோட்டல்களில் இன்று மட்டுமே சிலிண்டர் கையிருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஹோட்டல்களில் வெரைட்டியாக சமைக்க முடியவில்லை என்று கஸ்டமர்களிடம் கூற ஆரம்பித்துள்ளனர்.
நிலைமை விவகாரமாகி வருவதால், இந்த விவகாரத்தில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தலையிட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில், வீடுகளுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலிண்டர் பதுக்கலைத் தவிர்க்க, வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு இடையே குறைந்தது 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களின் எரிவாயு தேவையை ஆய்வு செய்யவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமார் 60%-க்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள சிக்கலே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் இந்தத் தற்காலிக நெருக்கடியைச் சமாளிக்க அரசுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.