சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

Su.tha Arivalagan
Aug 07, 2026,10:45 AM IST

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை சுவைப் பண்ணிக்கிட்டே இருக்கும்போது, திடீர்னு 30 வினாடில ஒரு வீடியோ வரும். மேல கொஞ்சம் மாவு, கீழ கொஞ்சம் சீஸ், நடுவுல ஒரு முட்டை... தூவறாங்க, திருப்பறாங்க, கடைசியில் ஒரு அருமையான 'சீஸி கவர்ஃபுல் டிஷ்' ரெடி!


அதைப் பார்த்தவுடனே நமக்குள்ள இருக்குற தூங்கிட்டிருந்த "மாஸ்டர் செஃப்" டக்குனு முழிச்சுப்பான். "அடேங்கப்பா! இவ்வளவுதானா? இதுக்கு போய் கடைல 300 ரூபாய் குடுக்குறோமே" அப்படின்னு மனசுக்குள்ள ஒரு தில்லு வந்துரும். நேரா கிச்சனுக்குள்ள 'ஹீரோ' என்ட்ரி கொடுக்க வேண்டியதுதான்!


ஆனா, ரீல்ஸ்ல காட்டுற அந்த 30 வினாடிக்கு பின்னால இருக்குற அந்த '3 மணி நேர போராட்டத்தை' அந்த வீடியோவுல காட்ட மாட்டாங்க பாருங்க... அங்கேதான் ஆப்பே இருக்கு!


வீட்டுல இருக்குற பாத்திரம், பண்டம் எல்லாத்தையும் எடுத்து வச்சு, ஏதோ வேதியியல் ஆய்வகத்துல பெரிய ரிசர்ச் பண்ற மாதிரி இறங்குவோம். "கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம் சோடா உப்பு, அப்புறம் ரீல்ஸ்ல சொன்ன அந்த சீக்ரெட் சாஸ்..." எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி அடுப்புல வைப்போம்.





கொஞ்ச நேரத்துல கிச்சன்ல இருந்து வர அந்தப் புகையைப் பார்த்தா, சமையல் நடக்குற மாதிரியே இருக்காது... ஏதோ ஏலியன் படத்துல வர்ற ஸ்பேஸ்ஷிப் வெடிச்ச மாதிரி இருக்கும்!


கடைசியில அந்த 'மாஸ்டர் பீஸ்' ரெடியாகி தட்டுல வரும்போதுதான் தெரியும்... அது ரீல்ஸ்ல பார்த்த உணவே இல்லை! ஏதோ புதுசா பண்ணின 'சயின்ஸ் எக்ஸ்பெரிமென்ட்'னு! அதை வாயில வைக்கிறப்போ, நம்ம கூட இருக்குறவங்க கொடுக்குற அந்த 'பயமுறுத்தும்' லுக் இருக்கே... அப்பாஜி அய்யோஜிதான்!


அதுவும் இல்லாம, சமைச்சு முடிச்ச அப்புறம் கிச்சனைப் பார்த்தா, ஏதோ சுனாமி வந்துட்டு போன மாதிரி இருக்கும். பாத்திரம் கழுவுற சிங்க்ல மலை மாதிரி பாத்திரம் குவிஞ்சு கிடக்கும். அதைச் சுத்தம் பண்ணும்போதுதான், "இனிமே சோஷியல் மீடியால வர்ற சமையல் வீடியோவை பார்த்தா 'லைக்' மட்டும் போட்டுட்டு அமைதியா போய்டணும்"னு மனசுக்குள்ள ஒரு பெரிய ஞானோதயம் வரும்!


சோஷியல் மீடியா சமையல்ங்கிறது பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா! ரகம் தான்!