திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?

Su.tha Arivalagan
Nov 25, 2025,06:45 PM IST

சென்னை : கடந்த வாரம் வரை குழப்பத்திலேயே இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி, இந்த வாரம் சட்டென ஒரே நாளில் சகஜமாகி விட்டது. அடுத்த கட்டமாக திமுக.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி முடித்தி, கூட்டணியை பைனல் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் தலைமை அமைத்து விட்டது. இந்த ஐவர் குழு சமீபத்தில் சத்யமூர்த்தி பவனில் கூடி முக்கிய ஆலோசனையையும் நடத்தி உள்ளது.


காங்கிரஸ் கட்சி 2001 சட்டசபை தேர்தலில் 46 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் 2006ல் தொகுதிகளை உயர்த்தி 50 இடங்களில் போட்டியிட்டது. அதில் 34 இடங்களில் வெற்றி பெற்றது. 2011ல் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் காங்கிரசின் பலம் தமிழகத்தில் குறைய துவங்கியது. இதனால் 2016ல் காங்கிரசிற்கு ஒதுக்கியது தொகுதிகளை 41 ஆக குறைத்தது திமுக. இந்த தேர்தலில் 8 இடங்களில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரசிற்கு ஒதுக்கிய தொகுதிகளை மேலும் குறைத்து 25 ஆக்கியது திமுக. ஆனால் அந்த தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


இந்த முறையும் காங்கிரசிற்கு 25 சீட்களை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் 34 எம்எல்ஏ.,க்கள் இருந்தால் ஒரு லோக்சபா எம்.பி., பதவியை பெற முடியும் என்பதால் இந்த முறை 39 முதல் 45 சீட்கள் வரை திமுக தலைமையிடம் கேட்டு பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். 45 கேட்டால் தான் பேச்சுவார்த்தையில் 35-39 சீட்டுக்கு டீல் பேசி முடிக்க முடியும் என்பது காங்கிரசின் கணக்கு. இதனால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை என்பதை ஆராய்ந்து அவற்றை கேட்டு, இந்த முறை கூடுதல் எம்எல்ஏ.,க்களை பெற வேண்டும் என்பது காங்கிரசின் திட்டமாக உள்ளது.




ஆனால் காங்கிரசிற்கு அதிக சீட் ஒதுக்கினால், மற்ற கூட்டணி கட்சிகளும் கூடுதல் சீட் கேட்க வாய்ப்புள்ளது. இது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதாலும், அதிக கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளதாலும் காங்கிரசிற்கு ஒதுக்கும் சீட்டுகளை குறைத்தாலும் குறைக்குமே தவிர, கூடுதலாக கொடுக்க திமுக தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. காங்கிரசிற்கு 25 சீட் என்பதில் திமுக உறுதியாக உள்ளதாம். 2029 லோக்சபா தேர்தலுக்கும் திமுக.,வின் ஆதரவு தேவை என்பதால் வேறு வழி இல்லாமல் 25 சீட்களை ஏற்கும் முடிவிற்கு காங்கிரஸ் வருவதற்கும் வாய்ப்புள்ளது.


காங்கிரஸ்- திமுக தொகுதி பங்கீடு டீலிங் எப்படி போகும் என்பதை நன்கு கணித்த காங்கிரசின் மூத்த நிர்வாகி ஒருவர் சைடு கேப்பில், தனது எம்.பி., சீட்டிற்காக இப்போதே துண்டு போட்டு வைத்து விட்டாராம். அதாவது அவரது எம்.பி., பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான் உள்ளதாம். இதனால் மீண்டும் தனக்கு ராஜ்யசபா எம்.பி., சீட்டை ஒதுக்கி தரும் படி திமுக.,வுடன் ரகசிய டீலிங் பேசி ஏற்கனவே முடித்து விட்டாராம். திமுக கூட்டணியில் தனது எம்.பி., சீட்டை உறுதி செய்வதற்காக தான், ஏறக்குறைய முடிவாக இருந்த தவெக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளே புகுந்து கபடி ஆடி, அந்த கூட்டணி ஏற்பட்டு விட்டாமல் ஆட்டையை களைத்து விட்டுள்ளாராம். 


இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி இறுதியாகி விட்டதால் தனது எம்.பி., சீட்டையும் உறுதி செய்து விட்டாராம். இதனால், திமுக பேசி பாருங்கள். ஆனால் அவர்கள் எத்தனை சீட் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என ஐவர் குழுவிற்கும் ஆலோசனை வழங்கி வருகிறாராம் அந்த முக்கிய புள்ளி.