2 கைகள் கூப்பிய குறியீடு.. திருப்பிய பிரதமர் மோடி.. ராமர் கோவிலில் அரங்கேறிய புதிய டெக்னாலஜி!

Su.tha Arivalagan
Nov 26, 2025,01:25 PM IST

அயோத்தி:  பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று ராமர் கோவிலின் உச்சியில் தர்ம கொடியை ஏற்றி வைத்தார். இது கோவிலின் அதிகாரப்பூர்வ நிறைவைக் குறித்தது. மேலும், இது "500 ஆண்டுகால உறுதிமொழி" நிறைவேறியதாக அவர் தெரிவித்தார். வழக்கமான கொடியேற்றும் முறையில் கயிற்றை இழுத்து கொடியை விரிக்கும் முறைக்கு மாறாக, ஒரு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.


ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி ராம ஜென்ம பூமியில் 2024ம் ஆண்டு பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இக்கோவிலில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை கோவிலின் உச்சியில், பிரதமர் மோடி காவி கொடியை ஏற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் வழக்கமான கொடியேற்றும் முறையை போல் கயிறை இழுக்காமலும், ஸ்விட்சை அழுத்தாமலும் புதிய தொழில்நுட்ப முறையில் கொடி ஏற்றப்பட்டது. இந்த தொழில்நுட்ப முறையை பற்றி பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள்.




புதிய கொடியேற்றும் முறையில், வேத மந்திரங்கள் ஓதப்பட்ட பிறகு, பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடம் ஒரு வெள்ளை நிற பலகை வழங்கப்பட்டது. அதில், இரண்டு கைகள் கூப்பிய நிலையில் இருக்கும் ஒரு அடையாள குறியீடு இருந்தது. பலகையின் பக்கவாட்டு பக்கமாக திரும்பி இருந்த கை கூப்பி வணங்கும் குறியீட்டை, பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும் இணைந்தும் லேசாக திருப்பி, நேராக திருப்பி வைத்தனர். அதை திருப்பியதும், அருகில் இருந்த பீடத்தின் மீது இருந்த கொடி, கயிறு மூலமாக தானாக மெல்ல மெல்ல கோவிலின் கோபுர உச்சிக்கு சென்றது. 


22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்த காவி நிறக் கொடி, பாராசூட் தர துணியால் ஆனது. இது ஒரு தடிமனான நைலான் கயிற்றைக் கொண்டு கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. இது 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. கொடியில் சூரியன் சின்னம் உள்ளது. இது ராமர் பகவானின் சூர்ய வம்சத்தைக் குறிக்கிறது. மேலும், ஓம் மற்றும் கோவிதாரா மரத்தின் சின்னங்களும் உள்ளன. கோவிதாரா மரம், ராம் ராஜ்யத்தின் மாநில மரமாக விவரிக்கப்படுகிறது.