ஜனவரியில் அரங்கேறிய வரலாறு.. மெட்ராஸ் மாகாணம் எப்படி தமிழ்நாடு ஆனது?

Su.tha Arivalagan
Jan 17, 2026,12:59 PM IST

- ஆ.வ.உமாதேவி

 

மெட்ராஸ் என்று தமிழ்நாட்டின் பெயர் முன்பு இருந்தது. அது பின்னர் தமிழ்நாடு என மாற்றம் கண்டது. இன்று அந்தப் பெயர் இந்தியாவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்தும் வருகிறது. இந்தப் பெயர் மாற்றம் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இதன் பின்னால் மிகப் பெரிய வரலாறும், உயிர்த் தியாகமும் அடங்கியுள்ளது.


சென்னை மாகாணம் என்பதை "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்ய,  தியாகி சங்கரலிங்கனார், 1956 ஆம் ஆண்டு 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஜீவானந்தம் போன்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்கள், திமுக நிறுவனர் அண்ணா, தமிழரசு கழகத் தலைவர் மா.பொ.சி. உள்ளிட்டோர் சங்கரனாரின் உயர்ந்த நோக்கத்தை ஆதரித்த அதே வேளையில், சாகும் வரை உண்ணாவிரதம் என்பதை கைவிட வலியுறுத்தினர். எனினும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்து, சங்கரலிங்கனார் அக்டோபர் 31 இல் உயிர் நீத்தார். 


1957 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக முதல் முறையாக வெற்றி பெற்று, பேரவையில் நுழைந்த போது "தமிழ்நாடு" பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் எனக் காரணம் தெரிவித்த அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு, அதனை நிறைவேற்ற மறுத்து விட்டது.




இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைக்கப்பட்டது. காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்தது.. 1967-ல் அண்ணா தலைமையில், திமுக ஆட்சி அமைந்தது. இதுதான் முதலாவது திராவிட ஆட்சி. ஆட்சிக்கு வந்த அண்ணா செய்த வரலாற்றுச் சம்பவம் ஜூலை 18 அன்று தமிழ்நாடு சட்டசபையில் நடந்தேறியது. 


அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என மாநிலத்திற்குப் பெயர் வைக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  தீர்மானத்தின்படி, 1969 ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று, இந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது. 


இது சங்கரலிங்கனாரின் தியாகம் மற்றும் மொழி வழி மாநில பிரிவினை போராட்டங்களின் விளைவாக நிகழ்ந்தது. இந்தப் பெயர் மாற்றம் மொழிவாரி மாநில பிரிவினையின் போது இருந்த, அரசியல் சூழல், மக்களின் உணர்வுகள் மற்றும் தலைவர்களின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவற்றின் பலனாக நிகழ்ந்தது. 


இந்த மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை உலகெங்கும் உரக்கச் சொல்லும் வகையில் தான், நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)