இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
Dec 06, 2025,02:19 PM IST
- ஷீலா ராஜன்
சங்குப்பூவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை கூகுளில் பார்த்து தெரிந்து கொள்ளவும்
இந்திய உணவுகளில் இட்லியைப் போல அதிகம் விரும்பப்படும் எளிதில் செரிக்கக்கூடிய ஆவியில் வைத்து வேக வைக்கும் இடியாப்பமும் முக்கிய இடத்தை பிடிக்கிறது.. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இடியாப்பம் மிகவும் எளிதில் சீரணமாக கூடிய மிகச்சிறந்த உணவு.
இடியாப்பத்தோடு தேங்காய் பால் ,தேங்காய் துருவல், வெல்லம் நாட்டு சக்கரை ஏலக்காய் அல்லது ஆட்டுக்கால் பாயா, வெஜிடபிள் குருமா ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும் போது சுவையோ நாக்கை சப்பு கொட்ட வைக்கும்.
இடியாப்பத்தினை எப்பொழுதும் வெள்ளை நிறத்திலேயே பார்த்து சலித்து போன கண்களுக்கு ஒரு மாற்றத்தை தரலாமா? அதில் என்ன மாற்றம் இருக்குன்னுதானே கேக்கறீங்க.. அட வாங்கங்க, அதை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..
தேவையானப் பொருட்கள்
சங்குப்பூ - 10
இடியாப்ப மாவு - ஒரு டம்ளர்
உப்பு - தேவைக்கேற்ற அளவு
வெந்நீர் - அரை லிட்டர்
சிறிதளவு நெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி, அதில் நன்கு கழுவிய சங்குப் பூக்களை இட்டு மிதமான தீயில் பூவின் சாறு இறங்கி தண்ணீர் நீல நிறமாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
ஆவியில் வைத்து வேக வைத்த இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு தேவையான உப்பினை கலந்து அதில் சிறிதளவு நெய்யை கலக்க வேண்டும். பின்னர் சங்குப்பூ சாறு இறங்கிய நீல நிற த்தண்ணீரை அந்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.. இப்பொழுது இடியாப்பம் செய்ய மாவு தயார்.
அதன் பிறகு எப்பொழுதும் போல இந்த மாவை இடியாப்ப அச்சில் விட்டு பிழிந்து எடுத்தால் மிக அழகிய ஊதா வண்ணத்தில் இடியாப்பம் கிடைக்கும்.. உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க... செஞ்சி அசத்துங்க.
அச்சச்சோ, சங்கப்பூ சாறு கொஞ்சம் மீந்திருச்சே.. அட அதுக்குப் போய் ஏன் கவலை.. மீதமிருக்கும் சங்குப்பூ சாறில் சிறிதளவு தேன், சிறிதளவு எலுமிச்சம் சாறு கலந்து சூடாக டீ போல பருகலாம்.. வேஸ்ட் ஆகாது, அதுவும் செம டேஸ்ட்டாக இருக்கும்.
பின்குறிப்பு